சென்னை:’பிக் பைட்’ டிரேக் மார்க் சின்னத்துக்கு அமெரிக்க நிறுவனம் உரிமை கோரிய வழக்கில் இந்திய நிறுவனம் வெற்றி பெற்றது. அமெரிக்காவின் செவன் லெவன் நிறுவனத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், டிரேட் மார்க் சின்னம், ஹைதராபாத்தை சேர்ந்த ரவி புட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது.
அமெரிக்காவை சேர்ந்த செவன் லெவன் இன்டர்நேஷனல் நிறுவனம் 1988ல் இருந்து தாங்கள் விற்பனை செய்யும் பொருள்களில் ‘பிக் பைட்’ சின்னத்தை பயன்படுத்தி வருவதாகவும், 1994ல் இந்த சின்னத்தை பதிவு செய்திருப்பதாகவும், ‘பிக் பைட்’ வணிக சின்னத்தை ரவி புட்ஸ் நிறுவனம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது நீதிபதி தெரிவித்துள்ளதாவது,
ரவி புட்ஸ் நிறுவனம் 2004ல் இருந்து இந்த டிரேட் மார்க் சின்னத்தை பயன்படுத்தி நாடு முழுதும் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. செவன் லெவன் நிறுவனம் 1994ல் பதிவு செய்திருந்தாலும், அது பொருள்களை இந்தியாவில் எங்கும் விற்பனை செய்யவில்லை.
சின்னம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்த போதும் எந்தவித வர்த்தகத்தையும் அந்நிறுவனம் துவங்கவில்லை என்பதை இந்த நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.
எனவே, வர்த்தக முத்திரை சட்டம் பிரிவு 18ன் கீழ் ரவி புட்ஸ் நிறுவனத்துக்கு, பிக் பைட் டிரேட் மார்க் வழங்கிய துணை பதிவாளரின் அனுமதி செல்லும். செவன் லெவன் நிறுவனத்தின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
