புதிய கணக்கீட்டில் பணவீக்கம் ஜனவரியில் 2.75 சதவீதம்

புதுடில்லி: புதிதாக வெளியிடப்பட்டுள்ள சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஜனவரியில் 2.75 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டு ஜனவரியில், 1.33 சதவீதமாக இருந்தது. உணவு பணவீக்கம் தற்போது 2.13 சதவீதமாக உள்ளது.

சென்ற மாதம் வரை, 2012ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு பணவீக்க தரவுகளை மத்திய அரசின் புள்ளிவிபரத் துறையின் கீழ் செயல்படும், தேசிய புள்ளிவிபர அமைப்பான என்.எஸ்.ஓ., வெளியிட்டு வந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு, அதை 2024ம் ஆண்டு அடிப்படையில் மாற்றி வெளியிட துவங்கியுள்ளது.

இதன்படி, புதிய வரிசையில் முதலாவதாக வெளியாகியுள்ள சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் 3 சதவீதம் என்ற கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. முந்தைய கணக்கீட்டில், 46 சதவீதமாக இருந்த உணவு பொருட்களின் பங்கு, தற்போது 37 சதவீதமாக குறைந்துள்ளது.

மாதாந்திர கல்வி கட்டணம், பயணம், தொலைபேசி செலவு, ஹோட்டல், தங்கும் விடுதி செலவு உட்பட 50க்கும் மேற்பட்ட புதிய அம்சங்கள், புதிய பணவீக்க கணக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

பணக்கொள்கைகளை வகுப்பதன் தரத்தை, புதிய, மேம்படுத்தப்பட்ட பணவீக்க வரிசை அதிகரிக்கும். அண்மைக்கால செலவுகளின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் நுகர்வோர் விலை பணவீக்கம் கணிக்கப்படுவது, நாட்டின் பொருளாதார நிலவரத்துடன் பொருந்தும்.

Image 1535224

Image 1535225

துல்லியமாக கணக்கிட உதவும்

புதிய கணக்கீடு, மக்களின் தற்போதைய வருமானம், நுகர்வு மற்றும் வாங்கும் திறன் ஆகியவற்றை மிகத் துல்லியமாக மதிப்பிட உதவும். உணவு மற்றும் பானங்கள் பிரிவுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளதால், பணவீக்கம் உணவு பொருட்கள் மட்டுமின்றி, அடிப்படை பொருள்கள் விலையை சார்ந்து இருக்கும். இது நிலையான பணக்கொள்கையை உருவாக்க உதவும் – அனந்த நாகேஸ்வரன் தலைமை பொருளாதார ஆலோசகர்

Source link