சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோடை சிறப்பு தொகுப்பு ரூ.2 ஆயிரம் உட்பட ரூ.5 ஆயிரம் இன்று (பிப்ரவரி 13) மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளுக்கு வங்கியில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தலைவர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு;
பயத்தில்
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தல் தோல்வி பயம்,முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. 28 மாதங்களாக ‘1000 ரூபாய்’ கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து ‘கோடைக்கால சிறப்புத் தொகை’ கொடுக்கிறாராம்.
2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா? சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை சீர்குலைத்துவிட்டு, இப்போது ‘தேர்தல் நேரத்து பணம்’ வரவு வைக்கும் இந்த பேட்ச்ஒர்க் வேலையை தமிழக பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?
செப் 2023 முதல் இதுவரை உங்கள் அரசு கொடுத்த தொகை ரூ. 34,000! ஆனால், உங்கள் ஆட்சியால் ஒவ்வொரு குடும்பமும் இழந்த குறைந்தபட்சத் தொகையே ‘ரூ.3,50,000’! இதை வீடு வீடாக சென்று அதிமுக அம்பலப் படுத்தி வருவதைக் கண்ட பயத்தில் வருவது தானே இந்த அறிவிப்பு?
இப்போது ‘மாதம் 2000 ரூபாய்’ என்று நான் அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதியைக் கண்டதும், வரும் 2026 சட்டசபை தேர்தல் பயத்தில், இந்த அறிவிப்பு வெளியில் வருகிறது.யாரும், எந்தவொரு திட்டத்தையும் தடுக்காத போதிலும், நீங்களாக வந்து ‘ஐயையோ முடக்கப் பார்க்கிறார்கள்’ என்று சொல்வதைப் பார்த்ததால் வேடிக்கையாக இருக்கிறது. ‘அனைத்து குடும்ப அட்டைக்கும்’ என்று வாய்கிழிய அளித்த வாக்குறுதியை 5 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், தகுதியானவர்களுக்கு மட்டும் என சொல்லி ,1 கோடி தமிழ்ப் பெண்களை நிராகரித்துள்ளீர்கள்.
இன்னும் மூன்று மாதங்களுக்குள் அமையவுள்ள அதிமுக ஆட்சியில், தமிழகப் பெண்களுக்கு ‘குல விளக்குத் திட்டம்’ முலம் அனைத்து குடும்பத் தலைவிக்கும் ‘மாதம் ரூ.2000’ என்று நான் அளித்த வாக்குறுதியானது, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அமல்படுத்தப்படும்.
தவெக தான் போட்டி
தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? வழக்கமாக மாதந்தோறும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு அறிவிக்கப்படுவது ஏன்?
இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம். ஒன்று மட்டும் உறுதியாகத் தெளிவாகிறது. நாம் மட்டுமே இவர்களுக்கு அச்சமூட்டச் செய்யும் வெற்றிக்கான மக்கள் சக்தி. அது மட்டுமா?
இவர்களை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான். அதுமட்டுமா? தி.மு.க. தனக்குப் போட்டியாகக் கருதுவதும் தன்னை வெல்லப் போகும் ஒரே மக்கள் சக்தி எனக் கருதுவதும் த.வெ.க.வைத் தான் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
எனவே, தாய்மார்களே, அக்கா, தங்கைகளே, உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி விஜயின் அரசியல் வருகையின் தாக்கத்தால் கிடைத்த இந்தத் உரிமைத் தொகையைச் சந்தோசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.
நம் ஆட்சி மலர்ந்ததும், அரசியல் ஆதாயத்திற்காகச் சுயநலமாகச் செயல்படும் இவர்களைப் போலன்றி, உண்மையான அக்கறையுடன் நம் மக்களுக்கு அனைத்து வகைகளிலும் அனைத்து வழிகளிலும் நல்லது மட்டுமே செய்வோம். அது உறுதி.
திமுக அரசுக்குத் தேர்தல் தோல்விக்கான திகில் ஊட்டும் அளவிற்கு விசில் ஊதும் தமிழ்நாட்டு மகளிருக்கு என் மனமார்ந்த நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
