டாக்கா: ஷேக் ஹசீனாவை விசாரணைக்காக இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என்று தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றிய வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
2024ம் ஆண்டு வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் காரணமாக அங்கு இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
கிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்து, வங்கதேசத்தில் நடந்த பொது தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தனிபெரும்பான்மையை பெற்றுள்ள வங்கதேச தேசியவாத கட்சி அங்கு ஆட்சியை அமைக்கிறது. நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.
இந் நிலையில், ; ஷேக் ஹசீனாவை விசாரணைக்காக இந்தியாவில் இருந்து வங்கதேசத்திற்கு நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேச தேசியவாத கட்சி வலியுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் சலாவுதீன் அகமது கூறியதாவது;
ஷேக் ஹசீனாவை முறையான விசாரணைக்கு உட்படுத்த வங்கதேசத்திற்கு நாடு கடத்த இந்தியாவை எங்கள் கட்சி முறையாக வலியுறுத்தும். வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே இந்த விவகாரத்தை முன்னெடுக்க தொடங்கி உள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
சட்டப்படி அவரை நாடு கடத்துமாறு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இந்த விவகாரம், எங்களின் இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையேயான பிரச்னை ஆகும். வங்கதேசத்தில் விசாரணையை எதிர்கொள்ளும் வகையில் அவரை (ஷேக் ஹசீனா) திருப்பி அனுப்புங்கள் என்று இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளோம். இந்தியா உள்ளிட்ட அனைத்த அண்டை நாடுகளுடன் சமூகமான நட்புறவுகளை வங்கதேசம் விரும்புகிறது.
இவ்வாறு சலாவுதீன் அகமது கூறினார்.
