சென்னை: ”வீட்டை விட்டு வெளியே வராத விஜய், மக்களை எப்படி சந்திப்பார்,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: தமிழக முதல்வர் ஸ்டாலின், பொது மக்களிடம் மிகப்பெரிய பொய் ஒன்றை சொல்லி உள்ளார். அவர், மகளிருக்கு 5,000 ரூபாய் அறிவித்தது, மிகவும் வேடிக்கையாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், எத்தனையோ கோடைகாலங்கள் வந்துள்ளன. அப்போதெல்லாம், 1,000 ரூபாய் வழங்கவில்லை. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், முதல்வர் இந்த தொகையை அறிவித்துள்ளார். அடுத்த முறை, தி.மு.க., ஆட்சிக்கு வராது. ஆனால், தப்பித் தவறி ஆட்சிக்கு வந்தால், அடுத்த 2029ம் ஆண்டு நடக்கும், லோக்சபா தேர்தலில்தான், முதல்வரை பார்க்க முடியும். மகளிருக்கான 1,000 ரூபாய் திட்டத்தை, மத்திய அரசு முடக்குவதாக முதல்வர் கூறுவது பொய்.
த.வெ.க.,வில் இணைந்த மூத்த தலைவர் செங்கோட்டையனால், அந்த கட்சி தலைவர் விஜயை, காண முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வராதவரால், எப்படி வெளியே வந்து, மக்களை சந்திக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
