உலக வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா மாறும்: பிரதமர் மோடி

புதுடில்லி: உலக வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா மாறும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் அவர் பேசியதாவது; மாற்றத்துக்கான நூற்றாண்டை உருவாக்குவதில் இந்தியா ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும். இந்தியா உலக வளர்ச்சியின் இன்ஜினாக மாறும். முன்பு அனைவருக்கும் ஒரே மாதிரியான கொள்கை என்ற அடிப்படையில் உலகம் இயங்கி வந்தது. இதில், ஒவ்வொரு நாடுகளும் பங்களிப்பாளர்களாக கருதப்பட்டன. ஆனால், தற்போது ஒவ்வொரு நாடும் மீள்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன.

உலக நாடுகள் இன்று எதை பேசுபொருளாக்கியுள்ளதோ, அதை இந்தியா 2015ம் ஆண்டே தனது கொள்கையாக மாற்றியது. நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட போதே, பிற நாடுகளின் வளர்ச்சி மாதிரியையும் இந்தியாவில் இறக்குமதி செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறோம்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் பயோ-பார்ம், செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

இன்று இந்தியா பல வளர்ந்த நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது. இது ஏன் 2014ம் ஆண்டுக்கு முன் நடக்கவில்லை? அரசின் தொலைநோக்குப் பார்வையில் ஏற்பட்ட மாற்றத்தினால் தான் இது நடந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் உற்பத்தித் துறை மிகவும் பலவீனமாக இருந்தது. அப்போது, வெறும் 4 நாடுகளுடன் மட்டுமே வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. ஆனால் இன்று இந்தியா தன்னம்பிக்கை மிக்க நாடாக உள்ளது. அதனால்தான் உலகம் நம்மை நம்புகிறது, நாமும் உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்கிறோம், இவ்வாறு அவர் கூறினார்.

Source link