அமெரிக்க அணி முதல் வெற்றி: 103 ரன்னுக்கு சுருண்டது நெதர்லாந்து

சென்னை: ‘டி-20’ உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. லீக் போட்டியில் 93 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் அமெரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

சாய்தேஜா அரைசதம்: அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனக் படேல் (36), ஷயான் ஜஹாங்கிர் (20) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. வான் டெர் மெர்வி, பிரெட் கிளாசன் ஓவரில்தலா 2 பவுண்டரி விரட்டிய சாய்தேஜா, 30 பந்தில் அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய சாய்தேஜா, 79 ரன்னில் (4×6, 5×4) ஆட்டமிழந்தார்.

அமெரிக்க அணி 20 ஓவரில்6 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. சுபம் ரஞ்சனே (48 ரன், 2×6, 3×4), முகமது மோசின் (1) அவுட்டாகாமல் இருந்தனர். நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

ஹர்மீத் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் (3), மேக்ஸ் ஓ’டவுத் (13), கோலின் ஆக்கர்மன் (0) ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த பாஸ் டி லீட் (23), கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் (20), ஹர்மீத் சிங் ‘சுழல்’ வலையில் சிக்கினர். வான் டெர் மெர்வி (10), லோகன் வான் பீக் (2), ஆர்யன் தத் (9) உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஏமாற்றினர்.

நெதர்லாந்து அணி 15.5 ஓவரில் 103 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. அமெரிக்க அணி சார்பில் ஹர்மீத் சிங் 4, ஷாட்லி வான் ஷால்க்விக் 3 விக்கெட் கைப்பற்றினர். சர்வதேச ‘டி-20’ போட்டியில் அமெரிக்க அணி, முதன்முறையாக நெதர்லாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.

Source link