சென்னை: சென்னை டேபிள் டென்னிஸ் கன்டெண்டர் தொடரின் அரையிறுதிக்கு இரண்டு இந்திய ஜோடி முன்னேறின.
சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் ‘ஸ்டார் கன்டெண்டர்’ தொடர் நடத்தப்படுகிறது. கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பயாஸ் ஜெயின், சிண்ட்ரெல்லா ஜோடி, 3-1 என (12-10, 13-11, 10-12, 11-9), இத்தொடரின் ‘நம்பர்-1’ அந்தஸ்து பெற்ற இந்தியாவின் தியா, மனுஷ் ஷா ஜோடியை வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், யாஷஸ்வினி ஜோடி 3-1 என (11-8, 9-11, 12-10, 11-9) இந்தியாவின் அன்குர், ஸ்வஸ்திகா ஜோடியை வென்றது. மற்ற காலிறுதியில் இந்தியாவின் ஆகாஷ், கவுஷனி ஜோடி, அனிர்பன் அனுஷ்கா ஜோடி தோல்வியடைந்தன.
ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சத்யன், ஹர்மீத் ஜோடி 0-3 என தென் கொரியாவின் ஜங்ஹுன், ஜங்சங் ஜோடியிடம் தோற்றது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்குர், பயாஸ் ஜோடி, 2-3 என பிரான்சின் போரட், காட்டன் ஜோடியிடம் போராடி தோற்றது.
ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சத்யன், ஸ்னேஹித், மனுஷ் ஷா, பெண்கள் ஒற்றையரில் நித்யா மட்டும், ‘ரவுண்டு-16’ சுற்றுக்கு முன்னேறினர்.
