திருப்பூர்: ரம்ஜான் மற்றும் யுகாதி பண்டிகை கால ஆர்டர் வரத்து துவங்கியுள்ளதால்,உள்நாட்டு விற்பனைக்கான பின்னலாடை உற்பத்தி, திருப்பூரில் வேகமெடுத்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு, கோடைக்கால விற்பனைக்கான ஆர்டர்கள் திருப்பூருக்கு வரத் துவங்கிவிட்டன. நாடு முழுதும் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை, மார்ச் 21ம் தேதியும், தெலுங்கானா, ஆந்திராவில் கொண்டாடப்படும், யுகாதி பண்டிகை, மார்ச் 19ம் தேதியும் வருகின்றன. இவ்விரு பண்டிகைக்காக, புதிய பின்னலாடை ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி வந்து கொண்டுஇருக்கின்றன.
திருப்பூரின், உள்நாட்டு விற்பனைக்கான, மாதாந்திர பின்னலாடை உற்பத்தி மதிப்பு, 1,500 கோடி ரூபாய்; அதில், ரம்ஜான் மற்றும் யுகாதி பண்டிகை ஆர்டர், பிப்., மற்றும் மார்ச் மாதம், 25 சதவீதம் வரை அதிகரிக்கும். எப்படி கணக்கு பார்த்தாலும், ரம்ஜான் பண்டிகை கால ஆர்டர்கள் கைகொடுக்கும் என, உற்பத்தியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) துணை தலைவர் பாலசந்தர் கூறுகையில், ”கோடைக்கால ஆடை உற்பத்தி வேகமெடுத்துள்ள நிலையில், ரம்ஜான் மற்றும் யுகாதி பண்டிகை கால ஆர்டர்களும் வந்து கொண்டிருக்கின்றன. வழக்கமான, மாதாந்திர உற்பத்தியுடன், 25 சதவீதம் அளவுக்கு ரம்ஜான் மற்றும் யுகாதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளன; கடந்த ஆண்டை காட்டிலும் ரம்ஜான் ஆர்டர் அதிக அளவில் திருப்பூருக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.
