கோயில் உண்டியலில் கைவரிசை அறநிலையத்துறை அவசியமா? ஹிந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்: ”அறநிலையத்துறை ஊழியர்களே, கோவில் உண்டியல் பணத்தை திருடுவதால், அறநிலையத்துறை அவசியம் தானா?” என, ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தமிழகத்தில் கோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும்போது, பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை ஊழியர்கள் திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் தங்க நகைகள் திருடு போய் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் கோவிலில், கோவில் செயல் அலுவலர், தங்கக் காசுகள் மற்றும் பணத்தை திருடி உள்ளார். இது குறித்து வழக்கு பதிந்த பிறகும், குற்றவாளியை போலீசே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் பணியாளர்கள் இருவர், 1.25 லட்சம் ரூபாய் உண்டியல் பணத்தை திருடி உள்ளனர். சமயபுரம் மாரியம்மன் கோவிலில், செயல் அலுவலர், தங்கக் காசுகளை திருடி, தலைமறைவாகியுள்ளார்.

அறநிலையத்துறை என்பது ஹிந்து கோவில்களின் சொத்துக்கள், வருமானங்களை பாதுகாத்து கண்காணிக்க உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால், அறநிலையத்துறை ஊழியர்களே உண்டியல் பணத்தை திருடுவதால்,அறநிலையத்துறை என்பது அவசியம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உண்டியல் திருட்டில் யார் யாருக்கெல்லாம் பங்கு பிரிக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுகிறது. உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பலர், தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்படுவது, சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

எனவே, ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை நடத்த வேண்டும்.கோவிலை விட்டு அறநிலையத்துறையினர் வெளியேற வேண்டும். பிற மத வழிபாட்டு தலங்கள் போல, ஹிந்து கோவில்களும் உள்ளூர் மக்களால் பராமரிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link