திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணைநல்லுார் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயியை போலீசார் மிரட்டியதால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெண்னைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ், 42; விவசாயி. இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஜே.சி.பி., வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்தார்.
சில மாதங்களாக கடனை அவரால் கட்ட முடியவில்லை. இதனால், நிதி நிறுவனத்தில் இருந்து கடன கட்டுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதையெடுத்து அப்பாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலையத்தில் நிதி நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் நேற்று மாலை 3:00 மணியளவில் அப்பாஸ் வசிக்கும் பெண்ணைவலம் கிராமத்திற்கு கிரேன் மற்றும் லாரியுடன் சென்றனர்.
அங்கு நிதி நிறுவன ஊழியருக்கும் அப்பாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்பாஸ், நான் கொடுத்த பத்திரத்தை திருப்பி கொடுத்துவிட்டு ஜே.சி.பி.,யை எடுத்துச் செல்லுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் திடீரென பெட்ரோலை தன்மீது ஊற்றிக் கொண்டு போலீசார் கண் முன்னே தீ வைத்துக் கொண்டார்.
உடன் அங்கிருந்தவர்கள், பலத்த காயமடைந்த அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ஆத்திரமடைந்த பெண்ணைவலம் கிராம மக்கள் கடலுார் – சித்துார் சாலை அமாவாசைபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் மற்றும் நிதி நிறுவன ஊழியர்களை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் மாலை 3:30 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையெடுத்து 4:30 மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. போலீசாரை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
