கரூர்: குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாப்பையம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை. இவர் தனது விவசாய நிலத்தின் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் என்பவர் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்துரை கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிவக்குமாரிடம் விவசாயி சின்னத்துரை வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையிலான போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
