தேர்தலை மனதில் வைத்தே ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளது திமுக; மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தேர்தலை மனதில் வைத்தே திமுக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: இன்றைக்கு தமிழகத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள், மிகப்பெரிய ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. சகோதரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. நம்முடைய தாய்மார்கள் ரயிலில் போக முடியவில்லை.

ஒரு பைக்கில் கூட போக முடியாத சூழல், இருந்து கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கூட செயின் பறிப்பு, அவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. இதையெல்லாம் மூடி மறைப்பதற்காக, தன்னுடைய ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்காக, இந்த 5 ஆயிரம் ரூபாய் வழங்கி ஆட்சி முடியும் நேரத்தில் நாடகத்தை முதல்வர் நடத்தி இருக்கிறார். அவர் 2021ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நான் ஆட்சிக்கு வந்த பிறகு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்று கூறினார். ஆனால் மூன்று வருடம் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லை.

அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. ஆட்சி முடியும் நேரத்தில் வந்து நான் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். தற்போது தேர்தலை மையமாக வைத்து முன்கூட்டியே ரூ.5 ஆயிரம் கொடுக்கிறேன் என்று சொல்லி மிகப்பெரிய போலியான நாடகத்தை நடத்தி இருக்கிறார். இவ்வாறு மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

Source link