`எஸ்.வி.ஆர், சோனியா காந்தியிடம் தனிப்பட்ட முறையில் பேச, நளினியின் மரண தண்டனை ரத்தானது' – திருமாவளவன்

நம்பிக்கை விருதுகள் 2025: திருமாவளவன் பேச்சு

திருமாவளவன்

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’ விழாவின் உச்சமாக மார்க்சியச் சிந்தனையாளரும். மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரைக்கு “பெருந்தமிழர் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழா மேடையில் திருமாவளவன் எம்.பி பேசுகையில், “நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே தோழரின் ‘இருத்தலியமும் மார்க்சியமும்’ என்கிற நூலையும், ‘கம்யூனிச அறிக்கை’ என்கிற நூலையும் படித்திருக்கிறேன்.

அப்போது எனக்குப் பெரிய புரிதல் இல்லை. என்றாலும், அது எங்களின் பார்வையை விசாலப்படுத்தியது. இன்றைக்கு நாங்கள் எந்தக் கோணத்தில் அரசியலைப் பார்க்கிறோமோ, எந்தக் களத்தில் போராடுகிறோமோ அதற்கு எஸ்.வி.ஆர் அவர்களின் சிந்தனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

திருமாவளவன்
திருமாவளவன்

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கிற ஒரு புதிய முயற்சி, இவை வேறு வேறு அல்ல என்பதை உறுதிப்படுத்துகிற பங்களிப்பு அளப்பரியது.

‘இந்து, இந்தி, இந்தியா’ என்கிற அவரது நூல் ஒவ்வோர் இளைஞரும் படிக்கவேண்டிய ஒன்று. இன்றைய அரசியல் சூழலில் அது மிகவும் அவசியமானது.

மற்றொரு முக்கியமான செய்தி… நளினி விடுதலையிலும் தோழர் எஸ்.வி.ஆரின் பங்கு மகத்தானது. மரண தண்டனையை ஒழிப்பதற்காக ஓர் இயக்கத்தைக் கட்டியவர். வி.வி.கிரி அவர்களின் மகள் மோகினி கிரி.

அவர்களை அழைத்து வந்து சென்னையில் நிகழ்ச்சி நடத்தினார். அதன் பிறகுதான் சோனியா காந்தி அம்மையாரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, நளினியின் மரண தண்டனையை ரத்துசெய்ய வலியுறுத்தினார்.

அதனடிப்படையில்தான் நளினி மரண தண்டனையிலிருந்து விடுதலை பெற்றார் என்கிற வரலாறு பதிவாகியிருக்கிறது.

PUCL என்கிற மனித உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்கியதிலும் அவருக்குப் பெரும் பங்குண்டு. இப்படிப் பல்வேறு தளங்களில் பன்முகத் திறமைகொண்ட ஒரு மாபெரும் ஆளுமையாக விளங்குபவர் ஐயா எஸ்.வி.ஆர்.

சமரசமற்ற போராட்ட குணமும், ஆழ்ந்த அறிவுப்புலமும்கொண்ட இவருக்கு, `பெருந்தமிழர் விருது’ வழங்குவது அந்த விருதுக்கே பெருமை” என்று கூறினார்.

Source link