ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது தென் ஆப்ரிக்கா. லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘டி’ பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சாப்மன் ஆறுதல்: நியூசிலாந்து அணிக்கு ஆலன் (31) ஓரளவு கைகொடுத்தார். பின் இணைந்த மார்க் சாப்மன், டேரில் மிட்சல் ஜோடி நம்பிக்கை தந்தது. . ஐந்தாவது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது யான்சென் ‘வேகத்தில்’ சாப்மன் (48) வெளியேறினார். நிகிடி பந்தில் மிட்சல் (32) ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்தது. நீஷாம் (23), ஹென்றி (9) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் யான்சென் 4 விக்கெட் கைப்பற்றினார்.
மார்க்ரம் விளாசல்: சவாலான இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், குயின்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. நியூசிலாந்து பந்துவீச்சை ஒரு கை பார்த்த மார்க்ரம், மாட் ஹென்றி வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். ஜேக்கப் டபி வீசிய 3வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். பெர்குசன் ‘வேகத்தில்’ குயின்டன் (20) போல்டானார். சான்ட்னர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய மார்க்ரம், 19 பந்தில் அரைசதம் கடந்தார்.ரிக்கிள்டன் (21), பிரவிஸ் (21) ஓரளவு கைகொடுத்தனர். பெர்குசன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய டேவிட் மில்லர் வெற்றியை உறுதி செய்தார்.
தென் ஆப்ரிக்க அணி 17.1 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 178 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மார்க்ரம் (86, 4×6, 8×4), மில்லர் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
