சமஸ்திபுர்: இந்திய கிரிக்கெட்டின் இளம் ‘புயல்’ வைபவ் சூர்யவன்ஷி 14. சமீபத்தில் முடிந்த உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்ட) தொடரில் 439 ரன் எடுத்தார். பைனலில் 175 ரன் எடுத்து கோப்பை வெல்ல கைகொடுத்தார்.
தவிர, 19 வயதுக்கு உட்பட்ட டெஸ்டில் சதம் அடித்த இளம் வீரர் (13 ஆண்டு, 187 நாள்), இளம் வயதில் ‘டி-20’ சதம் அடித்த இந்தியர், பிரிமியர் அரங்கில் சதம் அடித்த இளம் வீரர் (14 வயது, 32 நாள்), 19 வயது ஒருநாள் அரங்கில் இளம் வயதில் (14 ஆண்டு, 100 நாள்) சதம் அடித்தவர் என பல சாதனை படைத்துள்ளார்.
பீஹாரின் சமஸ்திபுரில் உள்ள போதர் சர்வதேச பள்ளியில் 10ம் வகுப்பு (சி.பி.எஸ்.இ.,) படிக்கிறார். உலக கோப்பை தொடரில் பங்கேற்றதால், கடைசி நேரத்தில் பள்ளிக்கு செல்லவில்லை. தற்போது வரும் பிப். 17 முதல் மார்ச் 11 வரை நடக்கவுள்ள, ஆண்டு இறுதி தேர்வுக்கு தற்போது தயாராகி வருகிறார்.
பள்ளி முதல்வர் நீல் கிஷோர் கூறுகையில்,” எங்கள் பள்ளியில் வைபவ், 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ளார். அவருக்கு எவ்வித சிக்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம்,” என்றார். தேர்வு முடிந்த பின், பிரிமியர் தொடருக்கு தயாராக, ராஜஸ்தான் அணியில் இணைய உள்ளார் வைபவ்.
