10 தொகுதிகள் தராவிட்டால் தனித்து போட்டி: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிரடி

சென்னை: மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று சென்னையில் அளித்த பேட்டி:

இந்திய குடியரசு கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட, தே.ஜ., கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டுள்ளோம்.

தொகுதிகள் ஒதுக்கீடு செய்யாவிட்டால், தலித் ஓட்டுகள் அதிகமுள்ள 51 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட உள்ளோம்; மீதமுள்ள தொகுதிகளில், தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவளிப்போம். தேர்தல் கமிஷன் சார்பில், தமிழகத்தில் போட்டியிட எங்களுக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இச்சின்னம், நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது கரும்பு விவசாயி சின்னத்தில் உள்ள நிறத்தை, நீலமாக மாற்ற உள்ளோம்.

த.வெ.க., தலைவர் விஜய், தே.ஜ., கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும். அவர் இணைந்தால், கூட்டணி மேலும் வலுப்பெறும்.

எதிர்காலத்தில் திருமாவளவன், ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி, கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலித் தலைவர்களை ஒன்றிணைத்து, ஒரே அமைப்பாக செயல்பட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமா பேச்சு! தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை, ராம்தாஸ் அத்வாலே சந்திக்க திட்டமிட்டிருந்தார்.

நேற்று மாலை 6:00 மணிக்கு, சென்னை அசோக் நகரில் உள்ள வி.சி., தலைமை அலுவலகத்தில் திருமாவளவனை சந்திக்க இருந்த நிலையில், முக்கியமான நிகழ்ச்சிகளை காரணம் காட்டி சந்திப்பை தவிர்த்து விட்டார்.

ஆனால், இருவரும் போனில் பேசி உள்ளனர். எதிர் எதிர் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரு தலைவர்களும் பேசியிருப்பது, சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link