– நமது சிறப்பு நிருபர் -:
மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட காங்., முடிவு செய்துள் ளது. இது, ஆளும் திரிணமுல் காங்., — பா.ஜ., இடையே நிலவும் நேரடி போட்டியை நான்கு முனை போட்டி யாக மாற்றியுள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால், மாநிலத்தில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் ஏப்ரலில் தமிழகத்துடன் சேர்த்து தேர்தல் நடக்கிறது.
தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் உள்ள மம்தா பானர்ஜி, நான்காவது வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.
படுதோல்வி
இந்த முறை எப்படியாவது வென்று, ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை விரட்டி அடிக்க வேண்டும் என்ற முனைப்பில், எதிர்க்கட்சி யான பா.ஜ.,வும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக மேற்கு வங்கம் இருந்தது. ஆனால் தற்போது, இடதுசாரிகளின் இருப்பே தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே மேற்கு வங்கத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடக்கிறது.
இந்த தேர்தலில், சட்ட விரோத ஊடுருவல், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி, பெங்காலி மொழி விவகாரம் போன்றவை முக்கிய பிரச்னைகளாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்., முடிவு செய்துள்ளது. 2011, 2016, 2021 ஆகிய சட்டசபை தேர்தல்களில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வி அடைந்த காங்., இந்த முறை தனித்து களம் காண்கிறது.
டில்லியில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் ஆகியோருடன், மேற்கு வங்க காங்., தலைவர் சுபாங்கர் சர்க்கார் உள்ளிட்ட நிர்வாகிகள், சமீபத்தில் நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,வுக்கு சாதகம்
காங்., ஆதிக்கமுள்ள மால்டா, முர்ஷிதாபாத் போன்ற மாவட்டங்களில், ராகுல், பிரியங்கா போன்ற தலைவர்களை வைத்து பொதுக்கூட்டங்களை நடத்தவும் காங்., திட்டமிட்டுள்ளது. இதனால், கட்சியின் இழந்த செல்வாக்கை மீட் டெடுக்கலாம் என, அக்கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
இந்த தேர்தலில் திரிணமு ல் காங்., – பா.ஜ., இடதுசாரி – காங்., என, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. சிறுபான்மையின ஓட்டுகளை தக்கவைக்க முதல்வர் மம்தா பானர்ஜி முயன்று வரும் சூழலில், காங்., தனித்துப் போட்டியிடுவது அந்த ஓட்டுகளை பிரிக்கக்கூடும் என, கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி ஓட்டுகள் பிரிவது தங்களுக்கு சாதக மாக அமையும் என, பா.ஜ., வும் நம்புகிறது. இதனால், இந்த முறை தேர்தல் களம் அனல் பறக்கும். தேர்தலில், யார் கோட்டையை கைப்பற்றப் போகின்றனர் என்பது மே மாதம் தெரிந்து விடும்.
