புதுடில்லி :இந்தியாவில் விமான நிலையங்களை கையாளுவதற்கு ஏற்ற கூட்டாளிகளை தேடி வருவதாக, ‘சாங்கி ஏர்போர்ட்’ குழுமத்தின் தலைவர் லிம் மிங் யான் தெரிவித்துள்ளார். விமான நிலைய உருவாக்கம், மேம்படுத்தல் மற்றும் நிர்வகித்தல் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து லிம் மிங் யான் தெரிவித்துள்ளதாவது:
ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையங்களுள் ஒன்றான, 170 நாடுகளுடன் விமான தொடர்பு கொண்ட சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை நிர்வகித்து வருகிறது எங்களின் சாங்கி ஏர்போர்ட் குழுமம்.
உலக அளவில் விமான போக்குவரத்து சார்ந்த சந்தை வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், இந்தியாவும் முக்கிய இடம் வகிக்கிறது. இதில் எவ்வாறு பங்கு பெறுவது என உன்னிப்பாக கவனித்து வருகிறோம். குறிப்பாக, தனியார் பங்களிப்போடு அதிக விமான நிலையங்களை திறக்க அரசு – -தனியார் இணைந்த மாடலை பரிந்துரைத்து வருகிறது இந்திய அரசு.
அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் விமான நிலையத்தில் எங்கள் குழுமம் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது. இந்த விமான நிலையம் சிறிதாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக, அதேநேரம் மதிப்பு கூட்டல் விஷயங்களை செய்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் விமான போக் குவரத்து கட்ட மைப்பு வேகமாக வளர்கிறது. எங்கள் குழுமம் விமான நிலையங்களை சிறப்பாக நிர்வகித்து வருகிறது. அதனால், உள்நாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து, தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறோம்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.
