மும்பை: பங்குச்சந்தை குறித்த போதிய புரிதல் இல்லாததுடன், நிபுணத்துவ ஆலோசகர்கள் பற்றாக்குறை ஆகியவை, எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்குச்சந்தையில் நுழைவதற்கு பெரும் சவாலாக இருப்பதாக செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது: பங்குச்சந்தையில் எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பங்கேற்பதன் வாயிலாக முதலீடு திரட்டுவதற்கான நிதி ஆதாரத்தை பரவலாக்க முடியும். வங்கிகளை மட்டும் சார்ந்திருப்பதை குறைப்பதால், வங்கிகள் சுதந்திரமாக மூலதன தேவைகள், முன்னுரிமை பிரிவுகளுக்கு கடன்களை வழங்க முடியும் .
இந்தியாவின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், எஸ்.எம்.இ., சந்தை இன்னமும் வளர்ச்சி காணவில்லை. பல எஸ்.எம்.இ., நிறுவனங்கள், பங்குச்சந்தை குறித்த போதிய அறிமுகம் இல்லாதது, நிபுணத்துவமிக்க ஆலோசகர்கள் பற்றாக்குறை மற்றும் ஐ.பி.ஓ., வெளியிடுவதற்கான அதிக செலவுகள் காரணமாக தயக்கம் காட்டி வருகின்றன.
சில எஸ்.எம்.இ., நிறுவனங்கள், பங்குச்சந்தை வாயிலாக திரட்டும் பணத்தை, எதற்காக திரட்டினார்களோ அதற்கு பயன்படுத்தாமல், தவறாக பயன்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர். தவறாக பயன்படுத்துவதை தடுக்க, விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதன்படி, லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ல பின்னணி கொண்ட நிறுவனங்கள் மட்டுமே புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதிக்கப்படுவர். இதனால், முதலீட்டாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். மேலும், மாநில தலைநகரங்களில் புதிய அலுவலகம் அமைக்கவும், எளிதாக பட்டியலிடப்படுவதற்கு எஸ்.எம்.இ.,களுக்கு தனி போர்ட்டல் அமைக்கவும் செபி திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
