கொழும்பு: இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று

கொழும்பு: இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

வருகிறார் அபிஷேக்

இந்திய அணி கடந்த இரு போட்டியில் அமெரிக்கா, நமீபியாவை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. அபிஷேக் சர்மா (வயிறு வலி, அஜீரண பாதிப்பு) தேறியது பலம். நேற்று அரை மணி நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார். இன்று துவக்கத்தில் அபிஷேக்-இஷான் கிஷான் விளாச காத்திருக்கின்றனர். சாம்சன் நீக்கப்படலாம்.

சரியும் ‘பேட்டிங்’

இத்தொடரில் இந்திய ‘பேட்டிங்’ சீராக இல்லை. அமெரிக்காவுக்கு எதிராக 13 ஓவரில் 77/6 என தவித்தது. பின் சூர்யகுமார் (84 ரன்) கைகொடுக்க, மீண்டது. நமீபியாவுக்கு எதிராக கடைசி 11 பந்தில் 4 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் துவக்கத்தில் இஷான் கிஷான் (61), ஹர்திக் பாண்ட்யா (52) அசத்தியதால், வெற்றி எளிதானது. ‘ஆல்-ரவுண்டர்’ ஷிவம் துபே நம்பிக்கை அளிக்கிறார். இவர்கள் இன்றும் மிரட்டினால், இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறலாம்.

வலுவான ‘சுழல்’

பந்துவீச்சு பலமாக உள்ளது. ‘வேகத்துக்கு’ பும்ரா, ‘சுழலுக்கு’ வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் உள்ளனர். கொழும்பு, பிரேமதாசா ஆடுகளம் ‘ஸ்பின்னர்’களுக்கு ஒத்துழைக்கும். இதனால் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ‘ஸ்பின் ஆல்-ரவுண்டர்’ தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தரை சேர்க்கும் திட்டம் உண்டு. ரிங்கு சிங்கை நீக்கிவிட்டு, இன்னொரு ‘ஸ்பின்னர்’ குல்தீப் யாதவ் இடம் பெறலாம். ஆசிய கோப்பை பைனலில் (2025, துபாய்) பாகிஸ்தானை திணறடித்த குல்தீப், 4 விக்கெட் சாய்த்தது சாதகம்.

பாபர் அனுபவம்

பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட நாளாக கொழும்புவில் விளையாடுவதால், இங்குள்ள சூழ்நிலையை அறிந்து வைத்திருப்பர். பேட்டிங்கில் சாஹிப்ஜாதா பர்ஹான், கேப்டன் சல்மான் அகா, அனுபவ பாபர் ஆசம், பகர் ஜமான் கைகொடுக்கலாம். ‘வேகத்துக்கு’ ஷாகீன் ஷா அப்ரிதி, சல்மான் மிர்சா, ‘சுழலுக்கு’ அப்ரார் அகமது, உஸ்மான் தாரிக் என ௪ ‘ஸ்பெஷலிஸ்ட்’ பவுலர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளது. உஸ்மான் தாரிக்கின் வினோதமான பந்துவீச்சு இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும்.

7-1

‘டி-20’ உலக கோப்பை அரங்கில் இரு அணிகளும் 8 முறை மோதின. இதில் இந்தியா 7, பாக்., 1ல் வென்றன.

மழை தொல்லை

கொழும்பு வானிலை மாறியுள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு.

கைகுலுக்கல் சிக்கல்

ஆசிய கோப்பை தொடரில் (2025, துபாய்) இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கி கொள்ளவில்லை. இதே நிலை இன்றும் தொடரலாம்.

Source link