கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில்

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது.

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொழும்பு மைதானத்தில் இன்று(பிப்.15) பலப்பரீட்சை நடத்தியது .இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரராக களமிறங்கிய அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, விஸ்வரூபம் எடுத்த இஷான் கிஷான் பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கினார். சிக்சருக்கும், பவுண்டரிக்குமாக பந்துகளை பறக்க விட்டார். இதனால், 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். 40 பந்துகளில் 77 ரன் எடுத்திருந்த போது இஷான் கிஷான் போல்டானார்.

தொடர்ந்து, திலக் வர்மா (25), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (32), துபே (27) ஆகியோர் ஓரளவுக்கு ரன் குவித்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சயூப் 3 விக்கெட்டும், சல்மான் ஆகா, ஷாஹின் அப்ரிடி, உஸ்மான் தாரிக் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

176 ரன் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஹர்திக் பாண்டியா வீசிய முதல் ஓவரில் பர்ஹான் (0), பும்ரா வீசிய 2வது ஓவரில் சயீப் (6), சல்மான் ஆகா (4) ரன்னிலும் அவுட்டாகினர்.

தொடர்ந்து இந்திய பவுலர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதனால், ஓரளவு தாக்குப்பிடித்த உஸ்மான் கான் 44 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து, முகமது நவாஷ் (4),சதாப் கான் (14), பஹிம் அஷ்ரப் (10), அப்ரார் அகமது (0), உஸ்மன் தாரிக் (0) ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். இறுதியில் 18 ஓவரில் பாகிஸ்தான் அணி 114 ரன்னுக்கு சுருண்டது. இதன்மூலம், 61 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.

நான்கு பேரைத் தவிர…

பாகிஸ்தான் அணியில் உஸ்மான் கான், ஷதாப் கான், பஹிம் அஷ்ரப், ஷாஹின் அப்ரிடி ஆகிய 4 வீரர்களை தவிர்த்து எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்னில் ஆட்டமிழந்தனர்.

மீண்டும் தவிர்ப்பு

கடந்த முறை பாகிஸ்தான் கேப்டன் மற்றும் வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள் கை குலுக்கவில்லை. இது பேசுபொருளானது. இன்றைய ஆட்டத்தில் அப்படி மீண்டும் நடக்கக் கூடாது என்று பாகிஸ்தானின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், டாஸ் போடும் நிகழ்வுக்குப் பிறகு, பாகிஸ்தான் கேப்டனுடன் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் கை குலுக்காமல் சென்றார். அதேபோல, போட்டி முடிந்தும் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுககு கை குலுக்குவதை தவிர்த்து, மைதானத்தை விட்டு வெளியேறினர்.

Source link