மும்பை: ‘டி-20′ உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்-8’ சுற்றுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னேறியது. லீக் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘சி’ பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
நேபாள அணிக்கு திபேந்திர சிங் ஐரி (58) அரைசதம் கடந்து கைகொடுத்தார். கேப்டன் ரோகித் (5), லோகேஷ் ராம் (13) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். நேபாள அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது. சோம்பால் கமி (26) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட் கைப்பற்றினார்.
ஹோப் நம்பிக்கை: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் (22) நல்ல துவக்கம் தந்தார். சந்தீப் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ஷாய் ஹோப், 38 பந்தில் அரைசதம் எட்டினார். சந்தீப், நந்தன் யாதவ் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார் ஷிம்ரன் ஹெட்மயர். வெஸ்ட் இண்டீஸ் அணி 15.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹோப் (61 ரன், 3×6, 5×4), ஹெட்மயர் (46 ரன், 2×6, 4×4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் ஹோல்டர் வென்றார்.
ஏற்கனவே ஸ்காட்லாந்து, இங்கிலாந்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ், ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் ‘சூப்பர்-8’ சுற்றுக்குள் நுழைந்தது. வரிசையாக 3ல் தோற்ற நேபாள அணி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
