சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9ல் ஓட்டெடுப்பு

தவாங்: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் அதைத்தொடர்ந்து ஓட்டெடுப்பும் லோக்சபாவில் வரும் மார்ச் 9ம் தேதி நடைபெறும் என, பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன., 28ல் துவங்கியது. தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.

மறுப்பு

காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய, இதுவரை வெளியிடப்படாத அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார்.

வெளியிடப்படாத புத்தகம், குறிப்புகளை ஆதாரமாக வைத்து லோக்சபாவில் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது என, சபாநாயகர் ஓம் பிர்லா, இப்பிரச்னையை எழுப்ப மறுப்பு தெரிவித்தார்.

இதனால், பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு முடிந்த பிப்.,13ம் தேதி வரை லோக்சபாவில் அமளி நீடித்தது.

நோட்டீஸ்

குறிப்பாக சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர்.

இதன் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளான, மார்ச் 9ம் தேதி நடைபெறும் என, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தன் லோக்சபா தொகுதியான தவாங்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்த தகவலை அவர் தெரிவித்தார்.

Source link