மியூனிக்: ஜெர்மனியில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடந்த வேளையில், ஈரான் அரசுக்கு எதிராக 2.5 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பேரணி ஒன்று நேற்று முன்தினம் நடந்தது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் மியூனிக் நகரில், சர்வதேச பாதுகாப்பு கொள்கை மாநாடு மூன்று நாட்கள் நடந்தது. இதில், பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, உலக தலைவர்களின் கவனத்தை ஈர்க்கவும், மேற்காசிய நாடான ஈரான் அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க வலியுறுத்தியும், 2.5 லட்சம் மக்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி ஒன்று மியூனிக் நகரில் நேற்று முன்தினம் நடந்தது.
ஈரானில் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவியின் அழைப்பை ஏற்று, இப்பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இப்பேரணியில் கலந்துகொண்டோர் மேளதாளங்கள் முழங்க, ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கான கோஷங்களை எழுப்பினர்.
‘மாற்றம், மாற்றம், ஆட்சி மாற்றம்’ என முழக்கமிட்ட கூட்டத்தினர், கடந்த 1979ல், பஹ்லவி வம்சத்தை வீழ்த்திய இஸ்லாமிய புரட்சிக்கு முன், ஈரான் பயன்படுத்திய சிங்கம், சூரியன் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பச்சை – வெள்ளை – சிவப்பு நிறக் கொடியை ஏந்தி சென்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் அணியும், ‘அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கி தொப்பியை போன்று, ‘ஈரானை மீண்டும் சிறந்ததாக்குங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய தொப்பியை மியூனிக் பேரணியில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிந்திருந்தனர்.
இத்தொப்பியை அணிந்தவர்களில் அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமும் ஒருவர்.
செய்தியாளர் கூட்டத்தில் இளவரசர் ரெசா பஹ்லவி கூறியதாவது:
ஈரான் நடத்தி வரும் கொடிய ஒடுக்குமுறைகளை, ஜனநாயக நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், ஈரானில் மேலும் பல மரணங்கள் தொடர்ந்து நிகழும். ஒரு மிகப்பெரிய ஆபத்தான நேரத்தில் நாங்கள் ஒன்று கூடி கேட்கிறோம்; உலகம் ஈரான் மக்களுடன் நிற்குமா?
ஈரானில் நடந்து வரும் தற்போதைய ஆட்சி, எவ்வளவு மக்களை கொன்றாலும், நீங்கள் ஆட்சியில் இருப்பீர்கள் என்ற ஒரு தெளிவான செய்தியை ஒவ்வொரு கொடுங்கோலனுக்கும் அனுப்பும் வகையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
