மியூனிக்: ஜெர்மனியில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் முப்படை தளபதி அசிம் முனீர், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்ட ‘வீடியோ’ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் மியூனிக் நகரில், சர்வதேச பாதுகாப்பு கொள்கைகள் குறித்த 62வது மாநாடு, கடந்த 13 முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்களாக நடந்தது.
உலகெங்கிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும், 100க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர்.
நம் நாட்டின் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று உரையாற்றினர்.
இம்மாநாட்டின் துவக்க நாளன்று, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முப்படை தளபதி அசிம் முனீர் மற்றும் அவரது குழுவினர், இம்மாநாட்டில் பங்கேற்க சென்றனர்.
அப்போது, அடையாள அட்டை அணியாததால், அசிம் முனீரை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி, முனீரின் அடையாள அட்டை எங்கே என கேட்க, அருகில் இருந்த அவரது குழு உறுப்பினர், அதை கையில் எடுத்து காண்பித்தார்.
இதையடுத்து, அடையாள அட்டையை கழுத்தில் அணியுமாறு, முனீரிடம் அந்த அதிகாரி அறிவுறுத்தினார்.
இது போன்ற உயர்நிலை மாநாடுகளில் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அடையாள அட்டை சரிபார்ப்பு என்பது ஒரு பொதுவான பாதுகாப்பு நடைமுறைதான் என்றாலும், ஒரு ராணுவத் தளபதி தடுத்து நிறுத்தப்பட்ட விதம் விவாதப் பொருளாகியுள்ளது.
முனீர் தடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
