முதலில் காத்திருப்பு; பிறகு தான் காப்பீடு ஆஸ்பத்திரி செலவு அவஸ்தைகள்

தற்போதைய பத்து நிமிட டெலிவரி உலகில், காத்திருப்பு என்பது பழைய பஞ்சாங்கம். ஆனால், ஆஸ்பத்திரி செலவு காப்பீட்டில் முதலில் ‘வெயிட்டிங் பீரியட்’ எனப்படும் காத்திருப்பு, பிறகுதான் காப்பீடு.

முதலிலிருந்து வருவோம். ஆஸ்பத்திரி காப்பீடுகள், ஒராண்டு கால அளவு கொண்டவை. புதிய பாலிசி எடுத்த முதல் 30 நாட்களுக்கு எந்த நோய்க்கும் கிளெய்ம் செய்ய முடியாது.

விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே, முதல் நாளிலிருந்தே காப்பீட்டு தொகை கிடைக்கும்.

பாலிசியை தொடர்ந்து புதுப்பித்து வந்தால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த 30 நாள் ஆரம்பகால காத்திருப்பு காலம் இருக்காது.

ஆனால் மாற்று இடத்தில் கதை தொடங்குகிறது! உங்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்து, அதன் பிறகு பாலிசி எடுத்தால், அவற்றுக்கான சிகிச்சைக்கு 24 முதல் 36 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதாவது, வெயிட்டிங் பீரியட்டுக்கு பிறகுதான் கிளெய்ம் கிடைக்கும்.

இவை மட்டுமல்ல, சில குறிப்பிட்ட சிகிச்சைகள் உங்கள் பாலிசியிலேயே பட்டியலிடப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட இவை எல்லாமே ‘டே கேர் சர்ஜரி’ அல்லது சிகிச்சையாக இருக்கும்.

இவற்றுக்கு பாலிசி தொடக்கத்திலிருந்து ஒராண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ வெயிட்டிங் பீரியட் இருக்கலாம். இது, பாலிசி மற்றும் இன்ஷூரன்ஸ் கம்பெனியை பொறுத்து மாறுபடும்.

ஏன் இந்த காத்திருப்பு காலம்

நோய் இருப்பது தெரிந்தவுடன் இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு, உடனே கிளெய்ம் செய்வதை தடுக் கவே இந்த விதிகள் உள்ளன.

நாளை நோய் வரலாம் என்பதற்குத்தான் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுமே தவிர, ஏற்கனவே நோய் இருக்கிறது என்பவருக்கு உடனடியாக வழங்கினால், காப்பீட்டு நிறுவனங்கள் நஷ்டமடையும் என்பதால் விதிகள் இப்படி வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, நமது பாலிசிகளை நுணுக்கமாக கவனித்து படித்து தெரிந்து வைத்திருப்பது நல்லது.

காத்திருப்பு காலம் வேறொரு கால கட்டத்திலும் எழுகிறது. அதாவது, நான் பல ஆண்டுகளாக 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு வைத்திருக்கிறேன்; அதை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி கொள்கிறேன் என்றால், அதிகப்படுத்தப்பட்ட பாலிசி தொகையான 3 லட்சம் ரூபாய்க்கு ஆரம்பக்கால காத்திருப்பான 30 நாட்கள் பொருந்தும்.

மேலும், இந்த தொகைக்கு ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காத்திருப்பு காலமும் பொருந்தும்.

காத்திருப்பு காலம் மட்டுமின்றி, பணத்தை செலவழிப்பதிலும் சில வரம்புகள் உள்ளன.

அறுவை சிகிச்சைக்காக நாம் சேர்க்கப்படும் மருத்துவமனையில் எந்த வகை அறையை தேர்தெடுக்கிறோமோ அதற்கேற்றவாறு வாடகை இருக்கும் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

அது எப்படி இருந்தாலும், நீங்கள் வைத்திருக்கும் மருத்துவ காப்பீட்டில் அதற்கு ஒரு லிமிட் உண்டு. பாலிசி தொகையில் ஒரு சதவீதம் என்பதே ஒரு நாள் வாடகையாக கிடைக்கும்.

உதாரணத்துக்கு, 10 லட்ச ரூபாய் பாலிசி என்றால், ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் வரை மட்டுமே அறை வாடகையாக கிளெய்ம் செய்யலாம். இதுபோல, ஐ.சி.யூ.,வில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 2 சதவீதம் லிமிட் உண்டு.

இது மட்டும் அல்ல, பல மருத்துவமனைகளில் அறையின் வகையை பொறுத்தே இதர பல கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதாவது, 10,000 ரூபாய் வாடகை உள்ள அறையில் இருப்பவருக்கு அறுவை சிகிச்சை நிபுணர் கட்டணம் ஒரு லட்சம் ரூபாய் என வைத்துக்கொள்வோம்.

இதுவே, 15,000 ரூபாய் வாடகை உள்ள அறையில் உள்ள நோயாளிக்கு அறுவை சிகிச்சை நிபுணர் கட்டணம் 1.50 லட்சம் ரூபாயாக இருக்கும். இன்னும் பல கட்டணங்களும் இந்த வகை கணக்கீட்டில் அடங்கும்.

கிளெய்மில் உங்களது அறை லிமிட்டை பொறுத்து தான் இதர செலவுகளையும் கொடுப்பர்.

மருத்துவ காப்பீடுகளில் சில நோய்களுக்கு சிகிச்சைக்கான செலவை கிளெய்ம் செய்ய உச்சவரம்பும் உண்டு. உதாரணத்திற்கு, கண்புரை போன்ற சிகிச்சைகளுக்கு இவ்வளவுதான் பணம் என்று ஒரு லிமிட் (உதாரணமாக 50,000 ரூபாய்) இருக்கும்.

நீங்கள் கூடுதல் பிரீமியம் செலுத்தி இந்த லிமிட்டை உயர்த்தினாலும், அதற்கும் சில ஆண்டுகள் காத்திருப்பு காலம் உண்டு.

அதிக பிரீமியம் கொடுக்க தொடங்கிய பிறகும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை அந்த உயர்ந்த கேட்ராக்ட் கவரேஜ் தொகையை கிளெய்ம் செய்ய முடியாது. இது ஒரு உதாரணம் தான். இன்னும் பல நீங்களே உங்கள் மருத்துவ காப்பீட்டை உன்னிப்பாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

புரியாத நிபந்தனைகள் தென்பட்டால் கேள்வியாக எழுதி அனுப்புங்கள், ஆராய்ந்து பதில் சொல்கிறேன்!

Source link