உலகின் மிக வேகமாக வளரும் சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது, இந்திய விமான போக்குவரத்து. கடந்த 2024 – 25ல், உள்நாட்டு விமான போக்குவரத்து 7.80 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி கண்டது. அந்த ஆண்டில் மட்டும் 16.57 கோடி உள்நாட்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருந்தாலும், நம் நாட்டின் விமான தயாரிப்பு முடிவு செய்யப்படுவது டில்லியிலோ, மும்பையிலோ இல்லை. அமெரிக்காவின் சியாட்டில், பிரான்சின் துலுாஸ் நகரங்களில் தான்.
இந்த இரு நகரங்களிலும், பயணியர் விமான தயாரிப்பு சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனம் அமைந்திருப்பது தான் இதற்கு காரணம்.
அந்த நிறுவனங்களில், இந்திய போக்குவரத்து நிறுவனங்கள் 1,800க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளன.
ஆனால், உலகம் முழுதும் இருந்து குவியும் ஆர்டர்களுக்கு ஏற்ற வேகத்தில் அந்த நிறுவனங்களால் விமானங்களை தயாரிக்க முடியாது என்பதால், இந்திய நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
பாதிப்பு
எனவே, தேவை உயரும் வேகத்துக்கு இணையாக சப்ளை இல்லாமல் விமான சேவைகள் பாதிக்கப்படுகின்றன.
இன்றைய தேதியில் நீங்கள் ஒரு போயிங் விமானத்துக்கோ, ஏர்பஸ் விமானத்துக்கோ ஆர்டர் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்; ஒரு ஐந்தாறு ஆண்டுகளுக்கு பிறகுதான் அந்த விமானம் உங்களுக்கு டெலிவரி ஆகும்!
இப்படி இந்த துறையின் வளர்ச்சிக்காக இன்னொருவர் கையை எதிர்பார்த்து கொண்டிருக்கும் அவல நிலைக்கு முடிவுக்கு கட்டுவது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
ஆனால், தற்போது அதற்கான காலம் கனியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை தந்திருப்பது, இந்தியாவிலேயே பயணியர் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்காக அரசு முன்வைத்துள்ள திட்டம்.
சாரஸ் கனவு திட்டம் இதற்கு முன்னர் கூட இந்தியா, இதே மாதிரியான கனவு திட்டத்தை செயல்படுத்தியது. ‘சாரஸ்’ என்ற அந்த 30 ஆண்டு கால திட்டம் எந்த குறிப்பிட்ட முன்னேற்றத்தையும் காணாமல் படுதோல்வி அடைந்தது.
கடைசியாக, 49வது சோதனை ஓட்டத்தின்போது சாரஸ் விமானம் விழுந்து நொறுங்கி மூன்று பேர் உயிரிழந்த பிறகு அத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம், நம்மிடம் பொறுமையும் இல்லை. வெற்றி, தோல்வி களுக்கு யாரும் பொறுப்பேற்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதுதான்.
ஆனால், இப்போது முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு விமான தயாரிப்பு திட்டத்தில், இந்த இரு முக்கிய குறைபாடுகளையும் நன்றாக புரிந்து கொண்டு, அதை தவிர்ப்பதற்காக அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பது தான் நம்பிக்கையை கொடுக்கிறது.
கற்றுக்கொண்ட பாடம்
தற்போது முன்வைக்கப்படும் திட்டத்தில், பிராந்திய போக்குவரத்துக்கான, குறைந்த இருக்கைகள் கொண்ட விமானத்தை தயாரிக்க 12,511 கோடி ரூபாய் ஒதுக்க அரசு முன்வந்துள்ளது.
இந்த திட்டம், பிற அமைப்புகளை சாராமல் தனியாக கட்டமைக்கப்பட்டிருப்பது, சாரஸ் திட்ட தவறுகளில் இருந்து அரசு பாடம் கற்றுக்கொண்டிருப்பதை காட்டுகிறது.
அது ஒரு புறம் இருக்க, திட்டத்துக்கான நிதி பகிர்மானம், விமான உற்பத்திக்கான ஒரு நாட்டின் திட்டம் என்றால், அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை அரசு கற்றுக்கொண்டு விட்டதை காட்டுகிறது.
இத்திட்டத்தில், விமானம் சரியாகத்தான் இயங்குகிறது என்பதற்கான சான்றிதழை உரிய அமைப்புகளிடம் இருந்து பெற மட்டும் 2,507 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நம் பழைய சாரஸ் விமான திட்டத்தில் இதை செய்யாமல் போனதுதான் மிக பெரிய தவறாக அமைந்தது.
இந்த சட்டப்பூர்வ அங்கீகாரத்தை பெறுவதற்கு ஆயிரக் கணக்கான மணி நேர சோதனை வேண்டியிருக்கும்; கட்டுக்கட்டாக ஆவணங்களை தயாரிக்க வேண்டியிருக்கும். இதற்கு அதிக செலவு பிடிக்கும்.
அதற்கேற்றாற்போல் அதிக நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, விமான வடிவமைப்பில் சான்று பெறல் எவ்வளவு முக்கியம் என்பதை அரசு தெரிந்து வைத்திருப்பதை உணர்த்துகிறது.
சீனாவும் திணறல்
உள்நாட்டு விமான தயாரிப்பில் இன்னொரு முக்கிய பிரச்னை இருக்கிறது. சீனாவே, அதன் ‘சி919’ விமானத்தை உருவாக்கும் திட்டத்தில் திணறி போயிருக்கிறது.
காரணம், அந்த விமானத்தின் 60 சதவீத பாகங்கள், அதிலும் இன்ஜின் முதல் லேண்டிங் கியர் வரையிலான மிக முக்கிய பாகங்கள் மேற்கத்திய நாடுகளில் இருந்து தருவிக்கப்படுகின்றன.
இந்த சார்பு நிலை காரணமாக, அமெரிக்காவுக்கு கோபம் வரும்போதெல்லாம் உதிரி பாகங்கள் கிடைக்காமல் திட்டம் தடுமாற வேண்டியிருந்தது.
இந்த நிலை இந்தியாவுக்கும் வராமல் தடுப்பதற்காகத்தான், அரசின் தற்போதைய விமான தயாரிப்பு திட்டத்தில், உள்நாட்டு பாகங்களுக்காகவே பிரத்யேகமாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.
களத்தில் தனியார் துறை
இது தவிர, உள்கட்டமைப்புக்காக 1,981 கோடி ரூபாய், தரை சோதனை மையம், மாதிரி விமான உருவாக்கத்துக்கு 1,873 கோடி ரூபாய் என, புத்திசாலித்தனமாக நிதி பகிர்மானம் செய்யப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த நீண்ட கால திட்டம் ஒரு புறம் என்றால், இன்னொரு புறம் தனியார் நிறுவனங்களும் இதில் களமிறங்கி, உள்நாட்டு விமான உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கவிருக்கின்றன.
கடந்த மாதம் மேற் கொள்ளப்பட்ட அதானி — எம்ப்ரேயர் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதற்கு ஓர் உதாரணம். 70 முதல் 146 வரையிலான இருக்கைகள் கொண்ட விமானங்கள் இந்த ஒப்பந்தம் வாயிலாக இந்தியாவில் தயாரிக்கப்படும்.
ஏற்கனவே, டாடா போயிங் ஏரோஸ்பேஸ், மஹிந்திரா ஏரோஸ்பேஸ் போன்ற நிறுவனங்கள் ஏர்பஸ்ஸுக்கும், போயிங்குக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உயர் தொழில்நுட்ப பாகங்களை தயாரித்து கொடுத்து வருகின்றன.
எனவே, இந்தியாவின் உள்நாட்டு விமான உற்பத்தி துவங்கும்போது, இந்த நிறுவனங்களும் அதற்கு பக்கபலமாக நின்று கைதுாக்கி விடும்.
எல்லாம் சரியாக நடந்தால், வரும் 2040ல் நாம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தில் நிச்சயம் பறக்கலாம்.
