நமது நிருபர்
எனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் என் பெயரை இழுக்க வேண்டாம் என நடிகை திரிஷா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சில நாட்களுக்கு முன்பாக, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில அரசியலில் உயர்ந்த நிலை வகிக்கும் ஒருவரின் இழிவான மற்றும் அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சி உடனும் தொடர்பில் இல்லை. அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. இதற்கு முன்பும் தொடர்ந்து தெரிவித்ததுபோல், அரசியல் விவகாரங்களில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறேன்.
என்னுடைய கலைத் திறமையால் மட்டுமே என்னை மதிப்பிட வேண்டும்; அரசியல் தொடர்புகள் என்ற குற்றச்சாட்டுகளால் அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் விவாதப் பொருளாக்கக் கூடாது என்பது பொதுவான நெறிமுறை. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புணர்ச்சியுடனும் சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எனது பெயரை எனக்கு தொடர்பில்லா விவகாரங்களில் இழுக்க வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் திரிஷா கூறியுள்ளார்.
