நமது டில்லி நிருபர்
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்ட வீடியோ சர்ச்சையான விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டது.
கடந்த 7ம் தேதி, முஸ்லிம்களை நோக்கி முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோவை, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், அசாம் பா.ஜ., வெளியிட்டது. இதற்கு காங்., உட்பட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இனப் படுகொலையை முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தூண்டுவதாக, கவுரவ் கோகோய் குற்றஞ்சாட்டினார். பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சர்ச்சைக்குரிய வீடியோவை அசாம் பா.ஜ., நீக்கியது.
இதற்கிடையில் இந்த வீடியோ தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 16)தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி மற்றும் நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் இந்த விவகாரத்தில் அசாம் முதலமைச்சர் பதவி ஏற்பு உறுதிமொழிக்கு எதிராக, அரசியல் சாசன அடிப்படையை பாதிக்கும் வகையில் முதல்வர் செயல்பட்டுள்ளார் என்று வாதிடப்பட்டது.
மனுதாரர் வாதங்களை கேட்டறிந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இது தொடர்பாக மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தனர். அந்த மனுவை விரைந்த விசாரிக்க மாநில உயர்நீதிமன்றத்திற்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
