மடப்புரம் காவலாளி அஜித்குமார் வழக்கு விசாரணை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்; மதுரை ஐகோர்ட் உத்தரவு

மதுரை; மடப்புரம் கோவில் காவலாளி கொலை வழக்கை 6 மாதங்களில் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி நகை திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் தாக்கியதல் அவர் உயிரிழக்க, இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் முதல்கட்டமாக 5 போலீசாரும், அதன் பின்னர் கூடுதலாக 5 பேரும் என மொத்தம் 10 போலீசார் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக, சிபிஐயிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் உள்ளிட்ட 5 போலீசார் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் அளிக்க, சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அஜித்குமார் கொலை வழக்கில் போலீசாரை மன்னிக்கமுடியாது. அவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை முடியும் வரை யாருக்கும் ஜாமீன் அளிக்கமுடியாது, வழக்கு விசாரணையை நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Source link