‘கூட்டணி நீடிக்க வேண்டுமானால், தி.மு.க.,வை தீவிரமாக விமர்சிக்கும் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூருக்கு கடிவாளம் போட வேண்டும்; அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்ற முடிவை எடுக்க நேரிடும்’ என, காங்கிரஸ் மேலிடத்திற்கு, தி.மு.க., தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
‘தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டுமானால், ஆட்சியில் பங்கு வேண்டும்’ என, தமிழக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது’ என, முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
என்ன தவறு? ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் மாணிக்கம் தாகூர் போன்றோர் விடாப்பிடியாக உள்ளனர்.
மதுரையில் நடந்த மாவட்ட காங்., செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், ‘நாங்கள் மரியாதையை மட்டும் தான் கேட்கிறோம். கூட்டணி கட்சியில் இருந்து, இரண்டு பேர் அமைச்சர்களாக இருந்தால் என்ன தவறு? நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்; நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும்.
‘எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால், திருப்பி அடிப்போம். எம்.பி., – எம்.எல்.ஏ., பதவி மண்ணாங்கட்டி பதவி’ என்றார்.
அவரது பேச்சு, தி.மு.க., தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரை, தி.மு.க., தலைமை தொடர்பு கொண்டு, ‘மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுத்து, அவர் இனி இப்படி பேச முடியாமல் கடிவாளம் போடுங்கள்.
‘அதை உடனடியாக செய்தால் தான், காங்கிரசுடன் கூட்டணி வைப்போம்; இல்லையென்றால் காங்கிரசுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்ற முடிவை எடுப்போம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து பேச, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அவசரமாக சென்றார். அங்கு, காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து, மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
கட்சி பார்த்துக் கொள்ளும் தி.மு.க., மேலிடம் விடுத்த எச்சரிக்கை குறித்தும் கார்கேவிடம் அவர் விளக்கினார். ‘தி.மு.க., – காங்., கூட்டணி நீடிப்பதாக, டில்லி மேலிடம் உடனடியாக அறிவிக்க வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே, தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் இளங்கோவன் அளித்த பேட்டியில், ”அகில இந் திய காங்கிரஸ் தலைவரும், மாநில தலைவரும் சொல் லும் கருத்துகளை நாங்கள் கேட்போம். மற்றவர்கள் சொல்வதை எல்லாம் , அவர்களின் கட்சி பார்த்துக் கொள்ளும்,” என்றார்.
காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டியில், ”தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து, மேலிட பொறுப்பாளர்கள் பேசுவர். மாணிக்கம் தாகூர் திருப்பி அடிப்போம் என சொல்லியுள்ளார். திருப்பி அடிக்க காங்கிரசுக்கு ‘பவர்’ இருக்கிறதா, இல்லையா என்பது மக்கள் கையில் இருக்கும் முடிவு,” என்றார்.
இந்நிலையில், தமிழக காங்கிரசைச் சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் 150 பேர், கார்கேவுக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
தி.மு.க., கூட்டணியில் சேர, ஆட்சியில் பங்கு கேட்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும். கூடுதல் சட்டசபை தொகுதிகளை பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பதவிகள் வழங்க வேண்டும்.
காங்கிரஸ் வளர, ஆட்சி நிர்வாகத்தில் பங்கு பெறுவது அவசியம். தி.மு.க., நம் கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பத்துார் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலர்கள் டி.செல்வம், அருள் பெத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘ஆட்சியில் பங்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டும்; திருப்பத்துார் மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்; உள்ளாட்சி தேர்தலில் 30 சதவீத இடங்கள் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதேபோல், தேனி மாவட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
