டில்லி தமிழ் கல்வி கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நிர்வாகக் குழு நீக்கப்பட்டு, புதிதாக

டில்லி தமிழ் கல்வி கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நிர்வாகக் குழு நீக்கப்பட்டு, புதிதாக இடைக்கால குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டில்லியில் நுாற்றாண்டு கண்ட டில்லி தமிழ் கல்வி கழகம் செயல்படுகிறது. இந்த கழகத்துக்கு, டில்லி அரசு 95 சதவீதம் மானியம் அளிக்கிறது.

பணிநீக்கம்

இதன் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக, டில்லி அரசுக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, போலி ஆவணங்கள் மூலம் நியமிக்கப்பட்ட ஏழு ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து, டில்லி துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா கடந்தாண்டு உத்தரவிட்டார்.

ஊழல் தொடர்பாக, மாநில கல்வி இயக்ககம் அளித்த புகாரை தொடர்ந்து, விசாரணை நடத்திய சி.பி.ஐ., டில்லி கல்வி கழகத்தின் செயலர் ராஜு உள்ளிட்ட ஒன்பது பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரிக்கிறது.

இதற்கிடையே, இந்த நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, இங்கு பணிபுரியும், 104 ஆசிரியர்களுக்கு மானியம் வழங்குவதை டில்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பான வழக்கு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில், முறைகேடுகளுக்கு காரணமான நிர்வாகக் குழுவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக, கடந்தாண்டு ஜூலையில் கல்வி கழக நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

புதிய உறுப்பினர்களை நியமிக்க சிறப்பு செயற்குழு கூட்டப்படாத நிலையில், 200க்கும் மேற்பட்ட பெற்றோர் ஒன்றிணைந்து சிறப்பு பொதுக்கூட்டத்தை நேற்று முன்தினம் நடத்தினர். இதில், தலைவர் ஆர்.கே.ராமன், செயலர் ஆர்.ராஜு உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாகக் குழுவை உடனடியாக நீக்குவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்வு

தொடர்ந்து, பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிக்க இடைக்கால குழுவை அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, தலைவராக கண்ணையாவும், ஓய்வு பெற்ற மத்திய அரசு விஞ்ஞானி அருண் குமார் செயலராகவும், சத்யன், மணி, ரஜினிகாந்த் ஆகியோர் உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்தல் நடந்து நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, டில்லி தமிழ் கல்வி கழகத்தின் நிர்வாகத்தை இடைக்கால குழு கவனிக்கும்.

– நமது சிறப்பு நிருபர் –

Source link