சென்னை: மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ.அருண் மீது, இயேசு சபையில் புகார் செய்யப்பட உள்ளதாக, கத்தோலிக்க சிறுபான்மை நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் ஜேசுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கத்தோலிக்க சமூகத்தின் கண்ணியம், உரிமை, நம்பகத்தன்மையை பாதுகாக்க, கத்தோலிக்க சிறுபான்மை நலச்சங்கம் உறுதி எடுத்துள்ளது.
தற்போது, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவரும், சென்னை லயோலா கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினருமான ஜோ.அருணை சுற்றி நிகழும் சர்ச்சைகள் கவலை அளிக்கின்றன.
அ.தி.மு.க., தகவல் தொடர்பு அணி தலைவர் கோவை சத்யன், லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அமைப்பு வழியாக நிதி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்; இந்த கருத்தை புறக்கணிக்க முடியாது; இதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பாதிரியார்கள், ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்; அரசியல் அதிகாரங்களுக்குள் சிக்கக் கூடாது. தற்போது, ஜோ.அருண் அரசு பொறுப்பில் இருக்கிறார்.
அதேபோல், கத்தோலிக்க கல்வி நிறுவன நிர்வாக குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இதனால், கல்வி நிறுவனம் சர்ச்சைகளுக்கு உள்ளாகிறது.
பத்திரிகை செய்திகளை காணும்போது, ஆளும் தி.மு.க., பிரதிநிதியாக அருண் செயல்படுவதாக தெரிகிறது.
எனவே, இந்த பிரச்னையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இயேசு சபையின் தலைமை நிர்வாகியிடமும், வாட்டிகனின் இந்திய அப்போஸ்தலிக்க துாதரிடமும், அவர் மீது புகார் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
