சென்னை: ”எனக்கு 1.46 கோடி; என் மனைவி பெயரில், 6.60 கோடி ரூபாய் கடன் உள்ளது. எனக்கு கடன் தந்த நிறுவனத்தின் உரிமையாளர் என் மகனா என்றால், அது எனக்கு தெரியாது,” என, தி.மு.க., – எம்.பி., பாலு, நீதிமன்றத்தில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை நடத்திய குறுக்கு விசாரணையில் தெரிவித்தார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது, தி.மு.க., – எம்.பி., பாலு தொடர்ந்த அவதுாறு வழக்கு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், 17வது பெருநகர குற்றவியல் நடுவர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணாமலை நடத்திய குறுக்கு விசாரணைக்கு, பாலு அளித்த பதில்கள்:
தி.மு.க., உறுப்பினரான, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, நான் மத்திய அமைச்சராக இருந்த போது, 10 பெரிய கப்பல்களை, நான் வாங்கியதாக பேட்டி அளித்து உள்ளார்.
இது தொடர்பாக, கடந்த, 2014, ஏப்.,4ல், பத்திரிகையில் செய்தி வெளியாகி இருப்பதாக கேள்வி எழுப்புகிறீர்கள். இந்த வழக்கிற்கும், நீங்கள் கேட்கும் கேள்விக்கும் சம்மந்தம் இல்லை.
10 கப்பல்கள்
என்னைப் பற்றி அழகிரி அப்படி சொல்லி இருப்பதாக, நீங்கள் கூறுவது உள்நோக்கத்துடன் சொல்வதாகும்.
மேலும், அழகிரி அளித்த பேட்டியில், நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 10 மீன்பிடி கப்பல்கள் வாங்கியதாகவும், அதன் வாயிலாக, தொழில் செய்து, லாபம் ஈட்டுவதற்காக, என்ன விலை கொடுத்தாவது, சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில், நான் உறுதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் என, நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
அப்படியானால், அழகிரிக்கோ அல்லது உங்களுக்கோ, அந்த திட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை. கடந்த, 2014ல், தேர்தல் நேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நான். 10க்கும் மேற்பட்ட கப்பல்கள் வாங்கியதாக, பொய்யான தகவல்களை வெளியிட்டு பேசினார். அது போல், நீங்கள் குறிப்பிட்டு சொல்லும் செய்திகள் உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம், வடசேரி கிராமத்தில், வடசேரி பாதுகாப்பு குழுவினர், என் குடும்பத்தினர் நடத்தும் சாராய ஆலையை கண்டித்து, ஆண்டுதோறும் கருப்பு தின அமைதி ஊர்வலத்தை நடத்துவதாக தெரிவிக்கிறீர்கள். அது பற்றி எனக்கு தெரியாது. அவ்வாறு சொல்லப்படுவது சாராய ஆலை அல்ல; அது ரசாயண தொழிற்சாலை. அதில் நான் ஒரு பங்குதாரர் மட்டுமே.
கடந்த 68 ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருக்கும் எனக்கு, சொந்த ஊரில் நடக்கும் போராட்டம் குறித்து தெரியாது என, சாட்சியம் அளிப்பதாக, நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது. அந்த போராட்டம், ஒரு நிறுவனத்திற்கு எதிரானது. தனிப்பட்ட முறையில், எனக்கு சம்பந்தப்பட்டது அல்ல.
நீங்கள் தான், உங்கள் வீட்டு வாடகையை நண்பர்கள் செலுத்துவதாகவும், நீங்கள் அணிந்து இருக்கும், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை, நண்பர்கள் கொடுத்தாக சொல்வதுதான் பொய்.
நீங்கள், உங்கள் மனைவி பெயருக்கு, 12 ஏக்கர், 11 சென்ட் என, இரண்டு நிலத்தை, பிரதீப், பெருமாள் சாமி உட்பட, 14 பேரிடம் இருந்து, ஒவ்வொரு நிலத்திற்கும், தலா, 2.25 கோடி ரூபாய் கொடுத்து, 4.50 கோடி ரூபாய்க்கு கிரையம் பெற்றுள்ளீர்கள். சமீபத்தில் தான் நீங்கள் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றீர்கள். அப்படியானால் உங்களுக்கு நிலம் வாங்க ஏது பணம்?
உங்கள் மைத்துனர் மற்றும் சிலர், செங்கல் தயாரிப்பு ஆலை நடத்துகின்றனர். அந்த ஆலையின் பங்குதாரர் ஒருவர் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் காரணமாகத்தான், உங்களை தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து, பிரதமரும் உள்துறை அமைச்சரும் மாற்றி விட்டனர். எனக்கு 1.46 கோடி; என் மனைவி பெயரில், 6.60 கோடி ரூபாய் கடன் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளேன்.
இக்கடனை, ‘டிரையூன் இம்பெக்ஸ்’ என்ற நிறுவனத்திடம் வாங்கி உள்ளேன். அந்த நிறுவனத்தை யார் நடத்துகின்றனர் என கேட்டால் தெரியாது. என் மகன் ராஜ்குமார், அதன் உரிமையாளர் என்றால், அது குறித்து எனக்கு தெரியாது. அதை கவனிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
அந்த நிறுவனத்திற்கு ஜி.எஸ்.டி., வரி பதிவு ரத்து செய்யப்பட்ட நிலையில், தொழில் செய்யாத நிறுவனத்திடம் இருந்து, நான் கடன் பெற்றதாக சொல்வது, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி என்றால், அது சரியல்ல. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
