Doctor Vikatan: திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு… நிஜமாகப் போவதற்கான அறிகுறியா?

கனவுகள் நிஜமாகிவிடுமோ என்ற பயம் தேவையற்றது. ஒரு கனவு மீண்டும் மீண்டும் வருகிறது என்றால், அதை உங்கள் ஆழ்மனதின் வெளிப்பாடாகப் பார்க்கலாம்.

திரும்பத் திரும்ப வரும் ஒரே கனவு: நிஜமாகுமா?

Doctor Vikatan: கடந்த சில மாதங்களாக எனக்கு ஒரே மாதிரியான கனவு, அதுவும் மோசமான, விரும்பத்தகாத கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. ஒரே கனவு திரும்பத் திரும்ப வரும்போது, அது ஒருவேளை உண்மையாகி விடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

 மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

கனவுகள் நிஜத்தில் நடக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எனவே, கனவுகள் நிஜமாகிவிடுமோ என்ற பயம் தேவையற்றது. ஒரு கனவு மீண்டும் மீண்டும் வருகிறது என்றால், அதை உங்கள் ஆழ்மனதின் வெளிப்பாடாகப் பார்க்கலாம்.  சிக்மண்ட் ஃப்ராய்டின் “ட்ரீம் அனாலிசிஸ்’   பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வகையில் கனவுகளை அலசுவதை ஒரு கலை என்றே சொல்லலாம். 

கனவுகள் வருவதை கீழ்க்காணும் விதங்களில் புரிந்துகொள்ளலாம். கனவை உங்கள் ஆழ்மனதின் செய்தியாகப் பார்க்கலாம். அதாவது உங்கள் மனதில் இருக்கும் ஏதோ ஒரு கவலை, பயம் அல்லது ஒரு மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு கனவாக வெளிப்படலாம்.
பல அறிவியல் கண்டுபிடிப்புகள் கனவுகளின் மூலமே விடை கண்டுள்ளன. எனவே, உங்கள் குழப்பங்களுக்கு கனவுகள் ஒரு புதிய கோணத்தைக் காட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு கனவு உங்களுக்குத் தொடர் கவலையைத் தந்தால், அது உங்கள் உடல்நலத்திலோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நலத்திலோ கூடுதல் அக்கறை காட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

கனவை உங்கள் ஆழ்மனதின் செய்தியாகப் பார்க்கலாம்.
கனவை உங்கள் ஆழ்மனதின் செய்தியாகப் பார்க்கலாம்.
Canva

நமது மூளையில் சிந்திப்பதற்கான பகுதி இருப்பதைப்போல, உணர்வுகளுக்கான ஒரு பகுதியும் உள்ளது. பொதுவாக பாம்பு துரத்துவது, உயரத்தில் இருந்து கீழே விழுவது, ஓடிக்கொண்டே இருப்பது அல்லது ஆபத்தில் சிக்கிக்கொள்வது போன்ற கனவுகள் பலருக்கும் பொதுவானவை. இவை அனைத்தும் நம் ஆழ்மனதில் இருக்கும் உணர்வுகளின் தூண்டுதலால் ஏற்படுபவை.  நாம் தூங்க ஆரம்பித்த 90-வது நிமிடத்தில் ஏற்படும் Rapid Eye Movement (REM) எனப்படும் தூக்க நிலையில்தான் கனவுகள் வருகின்றன. இந்த நிலையில், நமது மனம் மிகவும் சுறுசுறுப்பாக (Active) இருக்கும். கனவில் நாம் ஓடுவது போலவோ அல்லது செயல்படுவது போலவோ உணர்வோம். ஆனால், உடல் தசைகள் தற்காலிகமாக அசைவற்றுப் போகும். இது கனவில் காண்பதை நிஜத்தில் செய்து நமக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இயற்கை நமக்களித்த பாதுகாப்பு வசதி.

அறிவியல் பார்வையில், கனவுகள் குறித்துப் பெரிய அளவில் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கனவுகளை எதிர்மறையாகப் பார்க்காமல், பாசிட்டிவ் மனப்பான்மையோடு அணுகக் கற்றுக்கொள்ளுங்கள். அவை உங்களை இன்னும் கவனமாகவும், நிதானமாகவும் இருக்கச் சொல்லும் ஒரு குறியீடாக மட்டுமே கருதுங்கள். பாசிட்டிவ் சிந்தனைகளையும் வளர்த்துக்கொள்ளுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Source link