நமது நிருபர்
2026-2027ம் நிதியாண்டுக்கான வேளாண் இடைக்கால பட்ஜெட்டை, தமிழக சட்டசபையில் அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதன் விபரம் பின்வருமாறு:
* இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்க ரூ.4.5 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
* முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், ரூ.178 கோடியில்
21,35,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் 4,150 சோலார் பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளது.
* மக்காச்சோளம் உற்பத்தி ஏக்கர் 10 லட்சத்திலிருந்து 12 லட்சமாக அதிகரித்துள்ளது. ரூ.78 கோடியில் மக்காச்சோள உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தால், 1.50 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* 14 லட்சம் ஏக்கரில் ரூ.229 கோடியில் எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், 7.54 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* விவசாயிகளுக்கு 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
* வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 5 ஆண்டுகளில் 77,499 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 1,320 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டன.
* நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் 2021-22ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்து வேளாண்மை பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
* முக்கனிகள் சாகுபடி பரப்பு விரிவாக்கம் மூலம் 39,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு, மல்லி உற்பத்தியில் முதலிடத்திலும், கொய்யா உற்பத்தியில் 2வது இடத்திலும் உள்ளது. விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
* 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
* அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய கருணாநிதி வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது.
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்பட்டு உள்ளது. 17,340 ஆதி திராவிடர் பழங்குடியினர் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட்டு உள்ளது. 5,13,000 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
* பசுமைக்குடில், நிழல்வலைக் குடில் சாகுபடி ரூ.91 கோடியில் 23,55,000 சதுர மீட்டரில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
* சுவைதாளிதப் பயிர்களான மிளகாய், மஞ்சள், மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றின் சாகுபடி பரப்பு விரிவாக்கம் செய்யப்பட்டதால் 29,855 விவசாயிகள் பயன் அடைந்துள்ளன.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.
