டாக்கா: வங்கதேசத்தின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இந் நிகழ்வில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்றார்.
அண்மையில் வங்கதேச பார்லிமெண்டுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி மொத்தமுள்ள 297 இடங்களில் 209ஐ கைப்பற்றியது. வலதுசாரி கட்சியான ஜமாத் ஏ இஸ்லாமி 68 இடங்களில் வென்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு அதிபர் முகமது ஷாஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரது அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
மேலும் புதியதாக தேர்ந்து எடுக்கப்பட்ட அனைத்து எம்பிக்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் நசீர் உதின் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா கலந்து கொண்டார்.
வங்கதேசத்தில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் முதல் ஆண் பிரதமர் பதவியேற்று உள்ளார். கடந்த காலங்களில் ஷேக் ஹசீனா, கலீதா ஜியா என பெண் பிரதமர்களே மாறி, மாறி பதவி வகித்து வந்தனர். தற்போது முதல்முறையாக ஆண் பிரதமரான தாரிக் ரஹ்மான் கைகளுக்கு அரசு நிர்வாகம் செல்கிறது.
