சென்னை: சட்டசபைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும், ‘மாபெரும் காது குத்தும் விழா’ என்ற பெயரில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ்களை தங்கள் கையில் வைத்திருந்தனர்.
தமிழக சட்டசபையில் இன்று (பிப்.17) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டு இருந்தார்.
அப்போது சட்டசபைக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்களின் கைகளில் ஒரு அழைப்பிதழ் இருந்தது. அந்த அழைப்பிதழில் மாபெரும் காதுகுத்து விழா(இடைக்கால பட்ஜெட்டை விமர்சித்து இடம்பெற்ற வாசகம்) என்று தலைப்பிடப்பட்டு இருந்தது.
அந்த அழைப்பிதழில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது;
கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில், தமிழக மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா, இந்த வருடமும் வெகு விமரிசையாக நடக்கவுள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026. இடம்: தமிழக சட்டசபை, நேரம்: காலை 10:00 மணி முதல்.
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் முதல்வர் ஸ்டாலின். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார்.
மேற்படி விழாவில், கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று, மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
பின் குறிப்பு: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என, பல்வேறு முறைகளில், ‘மொய்’ வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழை அனைவரும் பார்க்கும் விதமாக, இரு கைகளிலும் உயர்த்தி காட்டியபடி அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர்.
