சென்னை: தமிழக அரசின் கடன் தொகை, வரும் 2026 – 27ம் நிதியாண்டில், 10.62 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபையில் நேற்று, தி.மு.க., அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

அதில், கூறப்பட்டு உள்ளதாவது: தமிழக அரசின் நடப்பாண்டு பட்ஜெட்டில், 2.21 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்ட மாநிலத்தின் மொத்த வரி வருவாய், 2.07 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஜி.எஸ்.டி., வருவாய் குறைவே, மதிப்பீடு குறைந்ததற்கு காரணம். வரும் 2026 – 27ம் ஆண்டு, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், 2 லட்சத்து 29,579 கோடி ரூபாய்; வரியல்லாத வருவாய், 27,704 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
கூடுதல் செலவினம்
நடப்பாண்டு பட்ஜெட்டில், 23,834 கோடி ரூபாயாக இருந்த மத்திய அரசு மானியங்கள், திருத்த மதிப்பீட்டில், 20,073 கோடி ரூபாயாக குறையும். இடைக்கால பட்ஜெட்டில், 24,762 கோடி ரூபாயாக இருக்கும். மத்திய அரசிடமிருந்து பெறும் தொகைகளின் விகிதம், கடந்த சில ஆண்டுகளில் வீழ்ச்சி அடைந்து வருகிறது.
நடப்பாண்டு பட்ஜெட்டில், 3 லட்சத்து 73,204 கோடி ரூபாயாக இருந்த மொத்த வருவாய் செலவினங்கள், திருத்த மதிப்பீட்டில், 3 லட்சத்து 78,917 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரேஷனில் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகளுக்கு, ஒரு முறை சிறப்பு நிதியுதவி என, அரசு ஒட்டுமொத்தமாக, 10,849 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டு உள்ளது. இடைக்கால பட்ஜெட்டில், மொத்த வருவாய் செலவினங்கள், 3.93 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மூலதன செலவு
நடப்பாண்டு மூலதன பணிகளுக்கு, 57,231 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், திருத்த மதிப்பீடுகளில், 51,443 கோடி ரூபாயாக உள்ளது. மூலதன செலவினம் எதிர்பார்த்ததை விட குறைந்துள்ளபோதிலும், இடைக்கால பட்ஜெட்டில் 59,562 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறை
நடப்பாண்டு பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை 41,635 கோடி ரூபாயாக இருந்தது. திருத்த மதிப்பீட்டில், 69,219 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் ஆண்டில், 48,696 கோடி ரூபாயாக குறையும்.
நடப்பாண்டு நிதிப் பற்றாக்குறை, 1 லட்சத்து 6,963 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. ஆனால், திருத்த மதிப்பீட்டில், 1 லட்சத்து 24,007 கோடி ரூபாயாகவும், வரும் ஆண்டில், 1 லட்சத்து 21,949 கோடி ரூபாயாகவும் உயரும்.
கடன்
நடப்பாண்டு, 9 லட்சத்து 29,959 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன், திருத்த மதிப்பீட்டில் 9 லட்சத்து 52,374 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அரசு வழங்கும் தொகையை நீக்கினால், திருத்த மதிப்பீட்டில், மாநிலத்தின் கடன் தொகை, 9 லட்சத்து 42,851 கோடி ரூபாயாகவும், இடைக்கால பட்ஜெட்டில், 10 லட்சத்து 62,248 கோடி ரூபாயாகவும் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

