ஷார்ஜாவில் அதிக முதலீடு இந்தியர்களுக்கு அழைப்பு

சென்னை: வாகனம் உள்ளிட்ட பல துறைகளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதாக ஷார்ஜா தெரிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டின் பொருளாதார ஒத்துழைப்புக்கான உயர்நிலை குழுவின் தலைவர் ஷேக் பஹிம் சுல்தான் அல் காசிமி தலைமையிலான குழு தெரிவித்ததாவது:

இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. எமிரேட்ஸில் 41,000 இந்திய நிறுவனங்கள் செயல்படுகின்றன. எமிரேட்ஸின் அங்கமான ஷார்ஜா இந்தியாவுக்கான சிறப்பான வர்த்தக கூட்டாளியாக உள்ளது. அங்கு 45 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

பதிப்பகம், அதிநவீன உற்பத்தி, பொறியியல், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, மருத்துவ தொழில்நுட்பம், பிளாஸ்டிக், வேளாண்மை மற்றும் உணவு உற்பத்தித் துறைகளில் ஷார்ஜா வலிமையாக விளங்குகிறது.

ஷார்ஜாவில் இந்திய புத்தொழில் நிறுவனங்கள் எளிதில் தொழில் துவங்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், வரியற்ற வர்த்தக மண்டலங்கள், சந்தை நுழைவுக்கான வசதிகள் உள்ளன. தொழில்முனைவோருக்கான வணிக காப்பகங்கள் எங்கள் நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இவ்வாறு அக்குழுவினர் தெரிவித்தனர்.

பதிப்பக தொழிலில் அதிக வாய்ப்பு


பதிப்பு தொழிலின் எதிர்காலம் மங்கிவிடவில்லை. உண்மையில் அத்துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே தான் ‘ஷார்ஜா பப்ளிஷிங் சிட்டி’ எனும் நகரையே நிறுவியிருக்கிறோம். அங்கு எழுதுவது, வடிவமைப்பது, அச்சிடுவது, புத்தகங்களை பாதுகாப்பது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புத்தகங்களை வினியோகிப்பது ஆகியவற்றுக்கான வசதிகள் உண்டு. ஷார்ஜாவின் பதிப்புத்துறையில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்’ என்று ஷார்ஜா வர்த்தக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Source link