கடந்த 3ம் தேதி, ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனம், தனது புதிய ஏ.ஐ., தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இது ஐ.டி., நிறுவனங்களின் பாரம்பரியப் பணிகளான கோடிங், டெஸ்ட்டிங் மற்றும் பி.பி.ஓ., சேவைகளை வெகுவாகப் பாதிக்கும் என்ற அச்சத்தை முதலீட்டாளர்களிடையே உருவாக்கியது.
இதன் விளைவாக, கடந்த 4 முதல் 16ம் தேதி வரையிலான காலகட்டத்தில் ‘நிப்டி ஐ.டி.,’ குறியீடு கிட்டத்தட்ட 15 சதவீதம் சரிந்தது. இதனால் முன்னணி ஐ.டி., நிறுவனங்களின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 4.85 லட்சம் கோடி ரூபாய் வரை வீழ்ச்சியடைந்தது.
இந்த மிகப்பெரிய சரிவுக்குப் பின், நேற்றைய வர்த்தகத்தில் நிப்டி ஐ.டி., குறியீட்டில் ஒரு நம்பிக்கையான மீட்சி காணப்ப ட்டது. இதற்கு முக்கியக் காரணம், ‘இன்போசிஸ்’ நிறுவனம் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்துடன் இணைந்து, வங்கி மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளுக்கான ஏ.ஐ. தீர்வுகளை உருவாக்கப்போவதாக அறிவித்ததே ஆகும்.
இதன் காரணமாக, ‘இன்போசிஸ்’ பங்கு விலை அன்றைய தினத்தின் ஆரம்ப வர்த்தகத்தில் 3 சதவீதம் வரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து ‘டி.சி.எஸ்., விப்ரோ, ஹெச்.சி.எல். டெக்’ போன்ற பங்குகளும் 1 முதல் 2 சதவீதம் வரை மீட்சி கண்டன.
வர்த்தக நேர முடிவில், நிப்டி ஐ.டி., குறியீடு 1.03 சதவீதம் உயர்ந்து, 33,075 என்ற புள்ளிகளில் நிலைபெற்றது. குறியீட்டில் உள்ள 10 பங்குகளில் 8 பங்குகள் ஏற்றத்துடனும், 2 பங்குகள் இறக்கத்துடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
நிபுணர்களின் கருத்து நேர்மறைப் பார்வை: புதிய ஏ.ஐ., தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தத் துவங்கும்போது, அதைச் செயல்படுத்த இந்திய ஐ.டி., நிறுவனங்களின் உதவி தேவைப்படும். இது புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்கும்.
எச்சரிக்கை பார்வை: ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் பாரம்பரியப் பணிகள் குறைந்து வருவாய் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், பங்குகளின் மதிப்பீடு இன்னும் வரலாற்றுச் சராசரியை விட அதிகமாகவே உள்ளது. எனவே, முழுமையான மீட்சிக்கு இன்னும் கூடுதல் காலம் எடுக்கலாம்.

முக்கிய ஐ.டி., பங்குகள்:
ஓ.எப்.எஸ்.எஸ்., : ரூ. 6,844 (2.16% உயர்வு)
இன்போசிஸ்: ரூ. 1,391 (1.88% உயர்வு)
ஹெச்.சி.எல். டெக்: ரூ. 1,483 (1.50% உயர்வு)
விப்ரோ: ரூ. 215.85 (1.21% உயர்வு)

ஐ.டி., நிறுவனங்களின் சந்தை மதிப்பு இழப்பு (பிப்.4 -16ம் தேதி வரை)
பங்கு பெயர் விலை மாற்றம் சந்தை மதிப்பு இழப்பு (ரூ. கோடியில்)
விப்ரோ -12% 30,864
இன்போசிஸ் -18% 1,17,748
எம்பசிஸ் -13% 6,791
டி.சி.எஸ்., -16% 1,87,670
ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ் -14% 63,364
ஆரக்கிள் ஃபின். சர்வ் -14% 9,812
டெக் மஹிந்திரா -12% 19,967
எல்.டி.ஐ., மைண்ட் ட்ரீ -15% 27,440
பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் -11% 10,987
கோபோர்ஜ் -19% 10,732
