aadi 2nd sevvai worship ஆடி 2வது செவ்வாய் 2026…அம்பிகையை இப்படி வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் தீரும்

ஆடி மாதத்தில வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடி செவ்வாய்கிழமை. ஆடி செவ்வாயில் செய்யப்படும் வழிபாடுகள் கடன் பிரச்சனைகள், தீராத துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட வைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி 2வது செவ்வாய்யில் அம்மனை எப்படி வழிபட்டால் அம்மனின் அருள் கிடைப்பதுடன், தீராத துன்பங்களில் இருந்தும், கடன் பிரச்சனைகளில் இருந்தும் மீள முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த சிறிய வழிபாடுகளில் நம்முடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பலனை அடைய முடியும்.

ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே அம்பிகையை வழிபட்டு, அவளின் அருளை பெறுவதற்கான நாள் தான் என்றாலும், சில குறிப்பிட்ட நாட்கள் மிகவும் விசேஷமானதாக சொல்லப்படுகின்றன. அப்படி ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. பொதுவாகவே செவ்வாய் கிழமை என்பது அம்பிகையை வழிபடுவதற்கும், முருகப் பெருமானை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. செவ்வாய்கிழமையில் ராகு காலத்தில் துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பார்கள். அதிலும் ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் அம்மனை உரிய முறையில் வழிபட்டால் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட முடியும் என சொல்லப்படுகிறது.

கடன் தீர ஆடி செவ்வாய் வழிபாடு :

ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்கிழமையில் அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வைத்து, வழிபட்ட பிறகு, யாராவது ஒருவருக்கு உணவு வாங்கிக் கொடுப்பதால் கடன் பிரச்சனை அனைத்திலும் இருந்து விடுபட முடியும். ஆடி முதல் செவ்வாய்கிழமையில் இந்த வழிபாட்டினை செய்ய தவறியவர்கள், ஆடி மாதத்தின் ஏதாவது ஒரு செவ்வாய்கிழமையில் இந்த வழிபாட்டினை மேற்கொள்ளலாம். அதோடு, கடன் பிரச்சனை விரைவில் நீங்க வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

ஆடி 2வது செவ்வாயில் செய்ய வேண்டிய வழிபாடு :

இந்த ஆண்டு ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்கிழமை ஜூலை 28ம் தேதி வருகிறது. இந்த நாளில் நாம் செய்யும் மிக எளிமையான வழிபாடு, துன்பங்கள், பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து நம்மை விடுவித்து, நன்மைகளையும், செல்வ வளத்தையும் அள்ளித் தரும் என சொல்லப்படுகிறது. ஆடி இரண்டாவது செவ்வாய்கிழமையில் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். அருகில் உள்ள கோவிலில் எந்த நேரத்தில் அபிஷேகம் நடைபெறும் என கேட்டுக் கொண்டு, அந்த சமயத்தில் அம்பிகைக்கு அபிஷேகத்திற்கு பால் மற்றும் பச்சரிசி மாவு வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் அம்பிகையின் விக்ரஹம் இருந்தால் அதற்கு பால் மற்றும் பச்சரிசி மாவால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

என்ன பலன் கிடைக்கும் ?

பால் என்பது வளம், நலம், செல்வத்தை வழங்கக் கூடியதாகும். பச்சரிசி மாவு என்பது பிறவி கடன் மட்டுமின்றி, இந்த பிறவியில் வாங்கிய கடன் ஆகியவற்றை நீக்கக் கூடியதாகும். பால், பச்சரிசி மாவு ஆகிய இரண்டு பொருட்களில் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக மீள முடியாத, மிக அதிக அளவிலான பிரச்சனையில் இருப்பவர்கள் இந்த இரண்டு பொருட்களையுமோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கு வாங்கிக் கொடுக்கலாம். அருகில் கோவிலோ, வீட்டில் அம்மன் விக்ரஹமோ இல்லாதவர்கள் வீட்டில் உள்ள அம்மன் படத்திற்கு பால், பழம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

ஆடி செவ்வாய் விரதம் :

ஆடிச் செவ்வாயில் அம்மனையும், முருகப் பெருமானையும் வேண்டி விரதம் இருந்து வழிபடலாம். இதனால் தீராத துன்பம் தீரும். முடிந்தவர்கள் முழுவதுமாக உபவாசம் இருந்து வழிபடலாம். முடியாதவர்கள் பால் பழம் மட்டும் சாப்பிட்டோ அல்லது வழிபாடு மட்டும் செய்தோ அம்பிகையை வழிபடலாம்.

Source link