aadi first sevvai worship இன்று ஆடி முதல் செவ்வாய் 2026 : கடன் தொல்லையில் இருந்து விடுபட இப்படி வழிபடுங்க

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடி செவ்வாய். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் பல காலமாக தீராமல் இருக்கும் துன்பங்கள் தீரும். சுப காரியங்களில் இருக்கும் தடைகள் விலகும். ஆடி செவ்வாய் அன்று செய்யும் மிக எளிமையான வழிபாடு, எப்படிப்பட்ட கடன் பிரச்சனையையும் தீர்க்கக் கூடிய சக்தி படைத்தது என சொல்லப்படுகிறது. ஆடி செவ்வாய் அன்று எந்த நேரத்தில், எப்படி வழிபட்டால் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். செவ்வாய் கிழமையில் செய்யப்படும் ராகு கால வழிபாட்டுடன், இந்த வழிபாட்டினையும் செய்வது விரைவான பலனை தரும்.

ஆடி செவ்வாய்கிழமை :

ஆடி மாதம் முழுவதுமே அம்மன் வழிபாட்டிற்கு உரியது என்றாலும் இந்த மாதத்தில் வரும் ஒரு சில மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நாட்களில் நாம் செய்யும் எளிய வழிபாடுகள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான துன்பங்களை அகற்றி, வளமான வாழ்க்கையை தரும் என்பது நம்பிக்கை. அப்படி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. பொதுவாகவே செவ்வாய்கிழமை என்பது கடன் தீருவதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஆடி செவ்வாய்கிழமையில் செய்யும் வழிபாடுகள், கடன்கள் விரைவில் அடைவதற்கான வழியை காட்டும் என்பது நம்பிக்கை.

ஆடி செவ்வாய் வழிபாடு :

ஆடி மாத செவ்வாய்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு மட்டுமின்றி சிவ வழிபாட்டிற்கும், முருகப் பெருமானை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு செவ்வாய்கிழமைகள் வருகின்றன. இவற்றில் முதல் செவ்வாய் கிழமை, ஜூலை 21ம் தேதியான இன்று அமைந்துள்ளது. பொதுவாக ஆடி செவ்வாய்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைபிடிப்பது வழக்கம். இது குடும்பத்தில் செழிப்பையும், அளவில்லாத நன்மைகளையும் அள்ளித் தரும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர செவ்வாய்கிழமையில் செய்யப்படும் எளிய வழிபாடு, எப்படிப்பட்ட கடன் பிரச்சனையையும் தீர்க்கக் கூடியதாகும்.

பிரதோஷ கால வழிபாடு :

பொதுவாக பலரும் செவ்வாய்கிழமைகளில் முழு உபவாசமாக இருந்து விரதம் கடைபிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி முழு உபவாசமாக இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். ஆடிச் செவ்வாய்யில் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்வதால் பொருளாதாரம் சார்ந்த கடன் மட்டுமின்றி, பிறவிக் கடனும் தீரும் என சொல்லப்படுகிறது. பொதுவாக மாதத்திற்கு இரண்டு முறை தான் பிரதோஷம் வரும். இதை பட்ச பிரதோஷம் என்பார்கள். இது தவிர தினமும் வரக் கூடிய மாலை 04.30 முதல் 6.00 மணி வரையிலான நேரத்தை பிரதோஷ காலம் என்பார்கள். இதற்கு நித்திய பிரதோஷம் என்று பெயர்.

கடன் தீர செய்ய வேண்டியவை :

ஆடி செவ்வாய் அன்று வரும் பிரதோஷ காலமான மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரையிலான நேரத்தில் அருகில் இருக்கக் கூடிய ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டும். சிவன் கோவில், முருகன் கோவில், அம்மன் கோவில், விநாயகர் கோவில் என வீட்டிற்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று மூலவரை வணங்கி, அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு நெய் விளக்கு ஏற்றி வைத்து, “என்னுடைய கடன்கள் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும்” என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, கோவிலுக்கு வெளியே வந்து, யாராவது ஒருவருக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு பொருள் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

எத்தனை வாரம் செய்ய வேண்டும்?

கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கான இந்த வழிபாட்டினை ஆடி முதல் செவ்வாய் கிழமையில் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆடி மாதத்தின் எந்த செவ்வாய்கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆடி மாதம் மட்டுமின்றி, கடன்கள் முழுவதுமாக அடைந்து முடியும் வரை ஒவ்வொரு செவ்வாய்கிழமையிலும் இந்த வழிபாட்டினை செய்யலாம். இது மிகவும் சிறப்பான பலனை தரும். இந்த வழிபாட்டினை நம்பிக்கையுடன் தொடர்ந்து செவ்வாய்கிழமை தோறும் செய்து வருவதால் விரைவில் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். இந்த வழிபாடு பலரும் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட காரணமான வழிபாடு என சொல்லப்படுகிறது.

Source link