aadi pooram 2026 ஆடிப்பூரம் 2026 எப்போது? இந்த நாளில் அம்மனுக்கு ஏன் வளையல் வாங்கிக் கொடுக்கிறோம்?

ஆடிப்பூரம் என்பது ஆண்டாளின் அவதார தினம் என்று மட்டும் தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது மட்டுமின்றி ஆடிப்பூரம் கொண்டாடுவதற்கு பல சிறப்பான காரணங்கள் உள்ளன. ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு கண்ணாடி வளையல் படைத்து வழிபடுவதும், வளைகாப்பு நடத்துவதும் ஏன் என்பதற்கும் ஆன்மீக மரபில் சில முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த ஆண்டு ஆடிப்பூரம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? இந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் தினத்தை ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம். ஆடிப்பூரம் அன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கண்ணாடி வளையல்களை காணிக்கையாக வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இந்த நாளில் அம்மனுக்கு பல வண்ண வளையல்களால் அலங்காரம் நடைபெறுவது உண்டு. சில ஆலயங்களில் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் வழக்கமும் உள்ளது. இந்த நாளில் அம்மனுக்கு சாத்தப்படும் வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த வளையலை அணிந்து கொண்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். ஆடிப்பூரம் என்றால் என்ன? இந்த நாளில் அம்மனுக்கு எதற்காக கண்ணாடி வளையல் வாங்கிக் கொடுக்கிறோம் என்ற காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆடிப்பூரம் என்றால் என்ன?

ஆடிப்பூரம் முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் ஆன்மீக மரபில் சொல்லப்படுகிறது. முதல் காரணம், பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்ணான ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த நாளாக ஆடிப்பூரம் சொல்லப்படுகிறது. இவர் மகாலட்சுமியின் அம்சமாகவும், பூதேவியின் வடிவமாகவும் போற்றப்படுகிறார். இரண்டாவது காரணம், பக்தர்கள் அழைப்பதற்கு முன்பாகவே அம்பிகை பூமிக்கு வந்து பக்தர்களை ஆசீர்வதித்து, அவர்களின் குறைகளை போக்கிடும் அற்புதமான நாளாகவும் ஆடிப்பூரம் சொல்லப்படுகிறது. அதனால் தான் ஆடிப்பூரம் வைணவ கோவில்களில் ஆண்டாளின் அவதார ஜெயந்தி தினமாகவும், அம்மன் கோவில்களில் வளையல் படைத்து வழிபடும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பூரம் ஏன் சிறப்பு ?

வழக்கமாக அம்மன் கோவில்களுக்கு சென்று நாம் நம்முடைய மனக்குறைகள், வேண்டுதல்களை சொல்லி முறையிட்டு, ஏதாவது ஒன்றை அருள வேண்டும் என அம்பிகையிடம் கேட்போம். ஆனால் ஆடிப்பூரம் என்பது கேட்பதற்கான நாள் கிடையாது. அது அம்மனின் அருளை, ஆசீர்வாதத்தை பெறுவதற்கான நாள் என்று சொல்லப்படுகிறது. அம்பிகை, நித்திய சுமங்கலி, உலகிற்கே தாயாக விளங்குபவள். அவளை நம்முடைய வீட்டு பெண்ணாக நினைத்து மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல், பூ போன்றவற்றால் அலங்கரித்து, அவளுக்கு வளைகாப்பு நடத்துவார்கள். அம்பிகையை தங்கள் வீட்டு பெண்ணாக கொண்டாடுவதால் பூமியில் பக்தர்களுக்கு அருள் ஆசியை வழங்குவதற்காக வரும் அன்னை, இந்த உபசரிப்புக்களை ஏற்று மகிழ்வாள் என்பது நம்பிக்கை. அம்மன் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் எழுந்தருள் என்பதால் தான் ஆடிப்பூரம் அன்று அனைத்து பெண்களையும் அம்பிகையின் அம்சமாக பாவித்து, வளையல், மஞ்சள், குங்குமம் வழங்கும் வழக்கம் உள்ளது.

ஆடிப்பூரம் 2026 எப்போது?

ஆடிப்பூரம் 2026 தேதி ஆகஸ்ட் 14 வெள்ளி பூரம் நட்சத்திரம் துவக்கம் ஆகஸ்ட் 14 காலை 07.22 பூரம் நட்சத்திரம் நிறைவு ஆகஸ்ட் 15 காலை 07.01 இந்த ஆண்டு ஆடிப்பூரம் திருநாள் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும்.

ஆடிப்பூரம் அன்று என்ன செய்ய வேண்டும்?

ஆடிப்பூரத்திற்கு ஏகாதசி போன்ற மற்ற விரத நாட்களை போல் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் விரதம் இருந்து அம்பிகையை மனதார வழிபடலாம். அம்மனுக்கு தாலிச்சரடு, மஞ்சள், குங்குமம், பூ, வளையல், வெற்றிலை பாக்கு போன்ற மங்கள பொருட்களை படைத்து வழிபட வேண்டும். முடிந்தவர்கள் புடவை, ரவிக்கை துணியும் எடுத்து வைத்து படைக்கலாம். வீட்டிற்கு சுமங்கலி பெண்களை அழைத்து சுமங்கலி பூஜை நடத்தலாம். அம்மனுக்கு படைத்த மங்கள பொருட்களை யாராவது ஒரு சுமங்கலி பெண்ணிற்கு தானமாக கொடுக்கலாம். அம்மன் கோவில்களுக்கு கண்ணாடி வளையல் வாங்கிக் கொடுத்து, நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

Source link