முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஜிம்பாப்வே, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகள், அபுதாபியில் மோதிய நிலையில், ஆப்கானிஸ்தான் அணி, அபாரமாக செயல்பட்டு 158 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், ஓபனர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 20 பந்தில் 25 ரன்களை மட்டும் சேர்த்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து, இப்ராஹிம் ஜோர்டன் மற்றும் செதிகுல்லா அடல் இருவரும் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி, பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
இதில், ஜோர்டன் 96 பந்தில் 9 பவுண்டரிகள் உட்பட 90 ரன்களையும், செதிகுல்லா அடல் 110 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 102 ரன்களையும் குவித்து அசத்தினார்கள். இதனால், 7.1 ஓவர்களில் 50/1 என இருந்த ஆப்கானிஸ்தான் அணி, அடுத்து 31.6ஆவது ஓவரில் 190/2 என்ற நல்ல நிலையை எட்டியது.
பிறகு, எந்த பேட்டரும் பெரிய சாத்தக்கத்தை ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால், ஹஸ்மதுல்லா ஷகிடியை 28 (30) தவிர எந்த பேட்டரும் இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 294/10 ரன்களை எடுத்தனர்.
ஜிம்பாப்வே அணி பௌலர்கள் பிராட் எவின்ஸ் மற்றும் மகுசு ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றிய நிலையில், முசரம்பானி 2 விக்கெட்களை எடுத்தார்.
ஜிம்பாப்வே படுதோல்வி: 295 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், பிரையன் பென்னெட் 31 (40), கேப்டன் சிக்கந்தர் ராசா 48 (80), ரியான் பர்ல் 31(63) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு பெரிய ரன்களை அடித்தார்கள். மற்ற எந்த பேட்டரும் சிறு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை. இதனால், ஜிம்பாப்வே அணி, 38.4 ஓவர்களில் 136/10 ரன்களை மட்டும் அடித்து, 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
ரஷித் கான், மிரட்டலாக பந்துவீசி, 8 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். பரூக்கி, 5 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை எடுத்தார்.
பைனலில் ஆப்கானிஸ்தான்? ஆப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டியில், ஒரு வெற்றியுடன் முதல் இடத்தில் இருக்கிறார்கள். நெட் ரன்ரேட் +3.160 என்ற அபாரமான நிலையில் இருக்கிறது. ஜிம்பாப்வே அணி, 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் -0.590 நெட் ரன்ரேட்டுடன் 2ஆவது இடத்திலும், வங்கதேச அணி, ஒரு போட்டியில், ஒரு தோல்வியை சந்தித்து -1.980 நெட் ரன்ரேட்டுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் நெட் ரன்ரேட் அபாரமாக இருப்பதால், இந்த அணி, கடைசி லீக் போட்டியில், வங்கதேசத்திற்கு எதிராக பெரிய தோல்வியை சந்திக்காமல் இருந்தாலே, பைனலுக்கு முன்னேறிவிடும். மறுபக்கம், வங்கதேச அணி, பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே, ஜிம்பாப்வேவின் நெட் ரன்ரேட்டை முந்தி, பைனலுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை இருக்கிறது.
அடுத்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் இடையிலான கடைசி லீக் போட்டி, அக்டோபர் 21ஆம் தேதியும், இறுதிப் போட்டி, அக்டோபர் 23ஆம் தேதியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
