ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 177 ரன்ளை அடித்து, இறுதியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அடுத்து, இரண்டாவது போட்டி துவங்கியது.
இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, பெரிய பின்னடைவு ஏற்பட்டது. பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். குறிப்பாக, 3.2 ஓவர்களில் 5 ரன்களை மட்டும் எடுத்து 4 விக்கெட்களை இழந்து தடுமாறினார்கள். இதனால், ஆப்கானிஸ்தான் அணி, 50 ரன்களை தாண்டுவது கூட கடினம் எனக் கணிக்கப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், 6ஆவது இட பேட்டர் அஜ்மதுல்லா ஒமர்ஜாய், தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடி, 50 பந்தில் 5 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உட்பட 116 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார்.
மேலும், இவருக்கு துணையாக, 7ஆவது இட பேட்டர் அகமதுஜாய் 27 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 52 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். பிறகு, இறுதிக் கட்டத்தில், ரஷித் கான், தொடர்ச்சியாக காட்டடி அடித்து, 6 பந்தில் 25 ரன்களை விளாசினார். இதில், 4 சிக்ஸர்களும் அடங்கும். இதனால், ஆப்கானிஸ்தான் அணி, இறுதியில் 20 ஓவர்களில் 221/7 ரன்களை குவித்து அசத்தியது.
5 ரன்னுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி, பிறகு 20 ஓவர்களில் 221/7 என ரன்களை குவித்திருப்பது, டி20 கிரிக்கெட் வரலாற்றில், மிரட்டலான கம்பேக்காக, வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
ஜிம்பாப்வே அணியில், எந்த பௌலரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, சிக்கந்தர் ராசா 4 ஓவர்களில் 53 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டைதான் எடுத்தார்.
26 வயதாகும் அப்துல்லா ஒமர்ஜாய்க்கு இதுதான், முதல் டி20ஐ சதமாகும். மொத்தம், 71 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஒமர்ஜாய், 133.55 ஸ்ட்ரைக் ரேட்டில் 20.88 சராசரியில் 1023 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 அரை சதங்களும், ஒரு சதமும் அடங்கும்.
ஐபிஎலில் 19 போட்டிகளில் ஆடியிருக்கும் இவர், 15.1 சராசரி, 149.51 ஸ்ட்ரைக் ரேட்டில் 151 ரன்களை அடித்துள்ளார். இதில், 10 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும் அடங்கும். ஒரு போட்டியில், அதிகபட்சமாக 38 ரன்களை அடிக்க முடிந்தது.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான இவர், பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டுள்ளார். 71 டி20 போட்டிகளில் 8.32 எகனாமியில் 60 விக்கெட்களை எடுத்துள்ளார். ஒரு போட்டியில், 9 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றியதுதான் இவரது சாதனை. ஐபிஎலில், 19 போட்டிகளில் 9.63 எகனாஇயில் 15 விக்கெட்களை எடுத்துள்ளார்.
உலக அளவில், வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஒமர்ஜாய் இருக்கிறார்.
முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி வென்றிருப்பதால், இரண்டாவது போட்டியிலும் ஆப்கானிஸ்தான் வென்றால், இத்தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிடுவார்கள். இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டி, நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும். பிறகு, இரு அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
