இந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிப் படங்களில் பாடியிருக்கும் பாடகி ஆஷா போஸ்லே நேற்று மும்பை மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மறைந்த இசைக்குயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இது தவிர சல்மான் கான், ஷாருக் கான் போன்ற பாலிவுட் பிரபலங்களும் ஆஷா போஸ்லேயிக்கு தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர். திரைப்படம், இசை மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் ஆஷா போஸ்லேயிக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் அஞ்சலி செலுத்தினார்.
இது தவிர இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஜாக்கி ஷெராஃப், ரித்தேஷ் தேஷ்முக், ரேணுகா ஷஹானே, ரன்வீர் சிங், ஆமிர் கான் மற்றும் ராகேஷ் ரோஷன் உள்ளிட்ட நடிகர்களும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மூத்த நட்சத்திரங்களான ஹெலன், பூனம் தில்லான் மற்றும் மீனாட்சி சேஷாத்ரி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு ஆஷா போஸ்லேயின் உடல் மும்பை லோவர் பரேலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அரசியல்வாதிகள், இசைக் கலைஞர்கள், பாலிவுட் பிரபலங்கள் புடைசூழ ஆஷா போஸ்லேயின் உடல் தாதர் சிவாஜி பார்க் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் தெருக்கள் மற்றும் சாலையின் இருபுறமும் நின்று மறைந்த இசைக்குயிலுக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மாநில துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சுனேத்ரா பவார் ஆகியோருடன், நடிகர்கள் விக்கி கௌஷல், ஆமீர் கான் மற்றும் பாடகர் அனு மாலிக் உள்ளிட்டோர், சிவாஜி பார்க் மயானத்தில் தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

இறுதிச் சடங்கின்போது பாடகர்கள் அனூப் ஜலோட்டா மற்றும் ஷான் ஆகியோர் நெஞ்சைத் தொடும் வகையில் பாடினர். ஆஷா போஸ்லேயின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் ஆஷா போஸ்லே மற்றும் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
