உலகில் நடக்கும் ஒவ்வொரு போரும் குழந்தைகளுக்கு எதிரான போர்தான். தற்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தும் போரால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள குழந்தைகளின் உயிர்கள், அதிகாரப் பசி ஏந்தி வரும் ஏவுகணைகளாலும் குண்டுகளாலும் குடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரத்தம் தோய்ந்த அக்குழந்தைகளின் புத்தகப்பைகள், காலணிகளின் புகைப்படங்கள் அதற்கு சாட்சியாகி, உலகின் மனசாட்சியை உலுக்கி வருகின்றன.
`ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த உடன்படவில்லை’ எனக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்துள்ள போர் இது. ஈரானின் உச்சத் தலைவர் கமேனி உட்பட, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 165 அப்பாவி சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் குறைந்தபட்சம் 10 லட்சம் குழந்தைகள் வரை போரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஐந்து வாரங்களுக்குப் போரை நீட்டிக்கப் போவதாக, ட்ரம்ப் கொக்கரித்துள்ளார்.
அமெரிக்க – ஈரான் போரால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல் உலகப் பொருளாதாரமே ஆட்டம் காண்பது வரை இதன் விளைவுகளை அரசாங்கங்கள் முதல் பல நாடுகளின் குடிமக்கள் வரை எதிர்கொள்ள இருக்கிறோம்.
ஆனால், போரில் தாக்குதலுக்கு ஆளாகும் தங்கள் நாட்டின் தெருக்கள், வீடுகள், பூங்காக்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் ரத்தக்களரியில் விழுந்து மடியும் குழந்தைகள்தான், போரினால் பாதிக்கப்படும் மற்ற அனைவரையும்விடவும் பரிதாபமானவர்கள். தொண்டையில் உள்ள மிட்டாயை விழுங்குவதற்குள், வீட்டுப்பாடத்தின் அடுத்த எழுத்தை எழுதுவதற்குள், விளையாட்டின் களைப்பில் தண்ணீர் பருக வருவதற்குள், அடுத்த நொடி அவர்களை இல்லாமல் செய்து சடலமாக்கி வருகிறது போர்.
2026-ம் ஆண்டு நிலவரப்படி, உலகம் முழுக்க 47.3 கோடி குழந்தைகள் போர்ச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். காஸா, சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, சிரியா, நைஜீரியா என உலகளவில் ஆறு குழந்தைகளில் ஒருவர் போர்ச் சூழலில் வசிக்கின்றனர்.
உயிரிழப்பு, படுகாயம், குடும்பத்தை இழப்பது, உறவுகள் யாருமற்ற அநாதரவு நிலைக்கு ஆளாவது, ஆயுதக் குழுக்களில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படுவது, அகதிகளாவது, கல்வி தடைப்படுவது, பாலியல் கொடுமைகள், சுகாதாரமின்மை, நோய்கள், பட்டினி எனப் போர், குழந்தைகளை மிகக் கொடூரமாக பாதிக்கிறது. அவர்களது குழந்தைமையைச் சிதைக்கிறது. அந்த மன உளைச்சல், பிழைத்திருந்தாலுமே ஆயுள் வரை அவர்களைத் துரத்துகிறது.
வியட்நாமில் அமெரிக்க குண்டுவீச்சில் உடலெங்கும் தீக்காயம்பட்டு அழுதபடி ஓடிவந்த சிறுமியின் கண்ணீரை உலகம் மறக்காது. நேஷனல் ஜியாகிரஃபிக் இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்ற, சோவியத் – ஆஃப்கன் போரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கண்களை, 41 வருடங்களாகியும் நம்மால் மறக்க முடியவில்லை அல்லவா? அதுபோல பல கோடி கண்கள், போர்க்களங்களில் தங்களைக் காப்பாற்ற நீளும் கரங்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன.
அக்கண்களின் அச்சம் துடைக்கப்பட வேண்டும்; போர்கள் நிறுத்தப்பட வேண்டும்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
