மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவை 3 சதவீதம் உயர்த்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தில் 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தும். அரசு அறிவித்துள்ள இந்த உயர்வு 2026 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இன்று, அக்டோபர் 28 மத்திய அமைச்சரவையால் இந்த முடிவுக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வரவிருக்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத் தொகையுடன் ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்கான நிலுவைத் தொகையைப் பெறுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்த உயர்வின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் நிலை வாரியாக கணிசமாக அதிகரிக்கும். உதாரணமாக, குறைந்தபட்ச அடிப்படை ஊதியமான ரூ. 18,000 பெறுபவர்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக சுமார் ரூ. 540 வரை பலன் கிடைக்கும். அடிப்படை ஊதியத்திற்கு ஏற்ப இந்த கூடுதல் தொகை மாறுபடும்.
மத்திய அரசின் இந்த முடிவானது அரசு ஊழியர்கள் பணவீக்கத்தின் தாக்கத்தை சமாளிக்க உதவும் வகையில், 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான நிலையான சூத்திரத்தைப் பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் வெகுவாகப் பயனடைவார்கள். அதுவும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இந்த அறிவிப்பு பயனாளிகளுக்கு இனிப்பான செய்தியாக இருக்கும்.
மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. முந்தைய அமைச்சரவைக் கூட்டங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அவர்கள் எதிர்பார்த்தை நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், இந்த மாதத்துக்கான இன்றைய கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு இன்று மகிழ்ச்சியும் நிவாரணமும் தரும் வகையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் ஜனவரி 1 முதல் கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது அடிப்படை சம்பளம், ஓய்வூதியத்தின் முந்தைய 58 சதவீத விகிதத்தை விட 2 சதவீதம் கூடுதலாகும். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் அதிகரிப்பால் அரசுக்கு ஏற்படும் ஒருங்கிணைந்த நிதிச் சுமை ஆண்டுக்கு ரூ.6,791.24 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Source link
